மத்திய அரசின் 100 நாட்கள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்விற்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்குகிறார்.

அன்புமணி ராமதாஸ் தலைமையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதேசமயம் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாக குழு கூட்டம் நடக்கவுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மௌனம் காத்து வருவதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவர் அமைதியாக இருப்பது அரசியலுக்கு அழகல்ல எனவும் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் மழை அவ்வப்போது இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டம் அறிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் வேங்கை வயல் விவகாரத்தில் மௌனம் காப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. காலாண்டு தேர்வு அடிப்படையில் மாணவ, மாணவிகள் அடையாளம் காணப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை சூளையில் செயல்படும் ஹஜ் இல்லம் தமிழ்நாடு அரசால் நடத்தப்படவில்லை. விமான நிலையம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ள ஹஜ் இல்லம் தான் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில் கட்டப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

2026-2027ம் ஆண்டுக்குள் தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5,116 கிலோ மீட்டர் தூரத்தில் இதுவரை 4,995 கிலோ மீட்டர் மின்மயமாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.222க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.99,200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.12,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் பொற்கோவிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.