தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரசும் தான் தட்டிக் கேட்க வேண்டும். அதை விடுத்து ஒரு படத்தில் நடிப்பவர்கள் எப்படி கேட்க முடியும் என தமிழக வெற்றிக் கழக இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்?

ஒரு நேர்காணலில் அவரிடம், “ஊழலை ஒழிக்க வேண்டும் என சொல்கிறீர்கள். விரைவில் வெளியாகவிருக்கிற ஜனநாயகன் படத்திற்கு ரூ.150க்கு ஒரு டிக்கெட்டை கூட வழங்க முடியவில்லை. அதனை அதிக விலைக்கு பிளாக்கில் விற்கிறார்கள். அந்த ஊழலை ஒழிக்க முடியாத பட்சத்தில் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிடிஆர் நிர்மல் குமார், “இந்த டிக்கெட்டுகளை தியேட்டர்கள் தான் விற்கிறார்கள். அதனை அரசாங்கம் தான் கட்டுப்படுத்த வேண்டும். அதிலிருக்கும் அதிகாரிகள் தான் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இதற்கு உதாரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் குறிப்பிடலாம்.

இப்போது பொங்கல் விடுமுறை காலம் வந்து விட்டது. ரூ.500க்கு விற்க வேண்டிய டிக்கெட்டுகள் ரூ.4 ஆயிரம் வரை விற்கிறார்கள். இதனை அரசும், அந்த துறை சார்ந்த அதிகாரிகள் தானே கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் தான் தியேட்டர்கள் தனி நபர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அந்த டிக்கெட் விலை, அதற்கான வரி விலையை அரசு தான் நிர்ணயிக்கிறது. அரசு துறை சார்ந்தவர்கள் சரியாக செயல்பட்டால் இப்பிரச்னையை சரி செய்ய முடியும்.

இதனை எப்படி சம்பந்தப்பட்ட படத்தில் நடித்தவர்கள், 700- 800 தியேட்டர்களுக்கு சென்று கட்டுப்படுத்த முடியும்?. இவை எல்லாமே நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் எண்ணமாக உள்ளது” என கூறினார்.

எந்த நம்பிக்கையில் வாக்களிக்க வேண்டும்?

தொடர்ந்து நிர்மல் குமாரிடம், “முன்னாடி எல்லாம் ரசிகர் மன்றம், மக்கள் மன்றம் கட்டுப்பாட்டில் தியேட்டர் டிக்கெட்டுகள் இருந்தது. இப்போது தவெக தொண்டர்களிடத்தில் உள்ளது. சென்னையில் தவெக நிர்வாகிகளிடம் போன் செய்து ஜனநாயகன் டிக்கெட் கேட்டால் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என சொல்கிறார்கள். அதற்கு குறைந்து கிடைக்கவில்லை. இவர்கள் தானே நாளை அரசியலில் வேட்பாளர்களா வருவார்கள். அப்படி வந்தால் எந்த நம்பிக்கையில் நான் வாக்களிக்க முடியும்” என கேட்கப்பட்டது.

இதற்கு, டிக்கெட் விஷயத்தில் ஒரு சில தனி நபர்கள் தான் இருப்பார்கள். அதை விடுத்து தவெக நிர்வாகிகள் பேனர், போஸ்டர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை செய்வார்கள். செய்பவர்கள் தியேட்டருக்கு வேண்டப்பட்ட நபராக தான் இருப்பார்கள். ஆனால் எங்கள் கட்சியில் அப்படி யாரும் இருந்தால் விஜய் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார். இதை அவர் ஊக்குவிக்க மாட்டார். விஜய் மிகவும் தெளிவான எண்ணத்துடன் வருவதால் இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் அவர் ரசிக்க மாட்டார்” என தெரிவித்தார்.