இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.

ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. அதேபோல, ரயில்களில் பயணிகளுக்கு நிறைய வசதிகள் உள்ளன. ரயில்களில் வேகமாகவும் சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். ரயில்களில் பயணம் செய்ய முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். அல்லது டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் எடுக்க வேண்டும்.ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது அதில் நமக்கு விருப்பமான பெர்த்தை தேர்வு செய்யும் வசதி இருக்கும். அதில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு கீழ் பெர்த்தான் வேண்டும் என்று தேர்வு செய்வார்கள்.

ஆனால் கீழ் பெர்த் என்பது அனைவருக்கும் கிடைத்துவிடாது. பல நேரங்களில் மிடில் பெர்த் ஒதுக்கப்படும். மிடில் பெர்த்தில் பயணிப்பது பலருக்கு சிரமமாக இருக்கும். அதேபோல, பெண்களுக்கு மேல் பெர்த் கிடைத்தாலும் சிரமமாக இருக்கும். மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பெட்டிகளில் கீழ் பெர்த் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன. இந்திய ரயில்வே விதிகளின்படி இந்த கீழ் பெர்த் இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கீழ் பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரயிலில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அறிவித்துள்ளது. அதாவது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் ரயிலில் பயணிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தனி இருக்கை (Berth) அல்லது இருக்கை (Seat) தேவையில்லை என்றால், இலவசமாகப் பயணம் செய்யலாம். அந்த குழந்தைக்கு டிக்கெட் வாங்கத் தேவையில்லை.

அதே வேளையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்குத் தனி பெர்த் வேண்டும் என விரும்பினால் அந்தக் குழந்தைக்கு பெரியவர்களுக்கான முழுக் கட்டணம் வசூலிக்கப்படும்.5 வயது முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு பெர்த் தேவையில்லை என்றால் அந்த குழந்தைகள் ரயிலில் பாதிக் கட்டணத்தில் அல்லது பெரியவர்களை விட குறைக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்க முடியும். அதே வேளையில் 5 வயது முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு பெர்த் வேண்டும் என விரும்பினால் அந்த குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

குழந்தைகளுக்கான சலுகை கட்டணம் நீங்கள் முன்பதிவு செய்யும் ரயில்களின் வகை (அதி விரைவு, சாதாரண எக்ஸ்பிரஸ்), முன்பதிவு பெட்டிகளின் வகை (ஏசி கோச், ஏசி அல்லாத சாதாரண கோச்) ஆகியவற்றை பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரயிலில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவே கருதப்படுவார்கள். ஆகவே 12 வயதுக்கு மேற்படவர்களுக்கு ரயிலில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளில் முழுக் கட்டணமே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.