இந்திய இருசக்கர வாகன சந்தையில் எப்போதுமே அதிக மைலேஜ் தரும் பைக்குகளுக்குத்தான் மவுசு அதிகம். பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகமாகவே இருப்பதால், நடுத்தர வர்க்க மக்களின் முதல் தேர்வு சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள்தான்.

அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து விற்பனையில் சக்கைப்போடு போடும் முன்னணி பைக்குகளாக ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா உள்ளிட்ட பல பைக்குள் திகழ்கின்றன. இவை இரண்டுமே ஒரு லிட்டருக்கு 70 கிலோமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்குகின்றன. அதேபோல இன்னும் சில பைக்குகளும் நல்ல மைலேஜ் தருகின்றன. அவற்றின் பட்டியல் இதோ!

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus)

இந்தியர்களின் அபிமான பைக்காக பல ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் இருப்பது ஹீரோ ஸ்பிளெண்டர். தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற இந்த பைக்கில் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வரும் இந்த பைக், லிட்டருக்கு சுமார் 70 கிலோமீட்டருக்கும் மேல் சிறப்பான மைலேஜ் தருகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 75,000-ல் இருந்து தொடங்குகிறது. குறைவான பராமரிப்பு செலவு இதன் மிகப்பெரிய பலமாகும்.

பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina)

மைலேஜ் மன்னன் என்று அழைக்கப்படும் பஜாஜ் பிளாட்டினா, ஸ்பிளெண்டருக்கு இணையான போட்டியாளராக உள்ளது. பிளாட்டினா 100 மாடலில் 102 சிசி இன்ஜின் உள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 72 கிலோமீட்டருக்கு மேல் தாராளமாக மைலேஜ் கொடுக்கிறது. சௌகரியமான பயணத்திற்காக நீண்ட சீட் மற்றும் சிறந்த சஸ்பென்ஷன் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ. 68,000 முதல் தொடங்குகிறது.

ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe):
மிகக் குறைந்த பட்ஜெட்டில் நம்பகமான பைக் வாங்க நினைப்போரின் முதல் சாய்ஸ் இதுதான். ஸ்பிளெண்டரில் உள்ள அதே 97.2 சிசி இன்ஜின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு செலவு மிகக் குறைவு என்பதோடு, அன்றாட பயன்பாட்டிற்கு லிட்டருக்கு 65 முதல் 70 கிலோமீட்டர் வரை சிறப்பான மைலேஜ் தருகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 60,000-ல் இருந்து தொடங்குகிறது.

ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100):
ஹீரோ ஸ்பிளெண்டருக்கு நேரடி போட்டியாக ஹோண்டா நிறுவனம் களமிறக்கிய சூப்பரான பட்ஜெட் பைக் இது. 98.98 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக்கில், ஹோண்டாவுக்கே உரித்தான மென்மையான இன்ஜின் திறன் கூடுதல் பலம். லிட்டருக்கு 65 கிலோமீட்டருக்கு மேல் மைலேஜ் தரக்கூடிய இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 65,000 ஆகும்.

ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125):
சற்று பிரீமியமான, அதேசமயம் நல்ல மைலேஜ் தரக்கூடிய 125 சிசி கம்யூட்டர் பிரிவில் இது ராஜாவாகத் திகழ்கிறது. சைலண்ட் ஸ்டார்ட், டிஜிட்டல் மீட்டர் என பல நவீன வசதிகள் இதில் உள்ளன. 124 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக், டிராபிக் நெரிசலிலும் லிட்டருக்கு 60 முதல் 65 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும். இதன் ஆரம்ப விலை சுமார் ரூ. 86,000.

டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125):

125 சிசி பிரிவில் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த ஸ்போர்ட்டியான பைக் இது. 124.8 சிசி இன்ஜின் கொண்ட இதில் ஈக்கோ மற்றும் பவர் என இரண்டு ரைடிங் மோடுகள், முழு டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்ற அசத்தலான வசதிகள் உள்ளன. பார்ப்பதற்கு ஸ்போர்ட்டி லுக் கொடுத்தாலும், லிட்டருக்கு சுமார் 55 முதல் 60 கிலோமீட்டர் வரை குறையாமல் மைலேஜ் வழங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 95,000-ல் இருந்து தொடங்குகிறது.

குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் தேடுவோருக்கு டீலக்ஸ் மற்றும் ஷைன் 100 பைக்குகளும், ஸ்டைலுடன் கூடிய மைலேஜ் எதிர்பார்ப்பவர்களுக்கு எஸ்பி 125 மற்றும் ரைடர் 125 பைக்குகளும் சிறந்த தேர்வுகளாகும். அதனால்தான் ஒவ்வொரு மாதமும் இவை விற்பனையில் உச்சத்தை தொடுகின்றன.