மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சுவேந்து அதிகாரியை பாஜக தலைமை அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சித் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொல்கத்தாவில் ஆலோசனையில் அமித் ஷா எடுத்த முடிவு

புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை கொல்கத்தா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சுவேந்து அதிகாரி சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் விஸ்வ பங்களா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சுவேந்து அதிகாரியின் பெயர் இறுதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் பாஜக அமைக்கவுள்ள முதல் அரசாங்கத்திற்கு அவர் தலைமை தாங்க உள்ளார்.

நாளை பதவியேற்பு விழா

சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் நிதின் நவீன் மற்றும் என்டிஏ கூட்டணி மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை அன்று சட்டசபையைக் கலைத்தார்.

இரட்டை வெற்றி: பவானிபூரா? நந்திகிராமா? இந்த தேர்தலில் சுவேந்து அதிகாரி பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, மமதா பானர்ஜியின் கோட்டையான பவானிபூரில் அவரைத் தோற்கடித்தது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. தற்போது இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் எந்தத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நந்திகிராமை விட பவானிபூரில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாலும், மமதாவை வீழ்த்திய தொகுதி என்பதாலும் அவர் பவானிபூர் தொகுதியைத் தக்கவைக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.