பொதுமக்களின் இலவச முழு உடல் பரிசோதனை திட்டத்திற்கான நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதியில் தொடங்கி வைத்தனர்.

மேடையிலே சண்டை போட்ட திமுக எம்பி - திமுக எம்.எல்.ஏ:

தேனியிலும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை திமுக எம்பி தங்கத்தமிழ்ச் செல்வன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் முன்பு தொடங்கி வைக்கும் விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பயனாளர் ஒருவருக்கு சான்றிதழ் வழங்கும்போது ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் சான்றிதழ் வழங்கினார். அப்போது, மறுபக்கத்தில் எம்பி தங்கத்தமிழ்ச்செல்வன் நின்று கொண்டிருந்தார்.

அவர் தானும் சான்றிதழில் கை வைக்க முயற்சித்தார். பின்னர், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அவரிடம் இருந்து சான்றிதழை பறிப்பது போல பின்னோக்கி இழுத்தார். பதிலுக்கு தங்கத் தமிழ்ச்செல்வனும் சான்றிதழை தன் பக்கம் இழுத்தார். மேடையிலே யார் சான்றிதழ் கொடுப்பது என்பதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மல்லு கட்டினர். அப்போது, மக்களவை உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. மகாராஜனைப் பார்த்து முட்டாள் என்று கூறியதாக கூறப்படுகிறது.

ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் திட்டு:

பின்னர், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வனை நீ யாரு என்று ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தங்கத் தமிழ்ச்செல்வனும் பதிலுக்கு அவரைத் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை மேடையில் இருந்த தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். மேலும், விழாவில் பங்கேற்ற பொதுமக்களும் திமுக நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மேடையில் இருந்த அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

திமுக-வின் சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும் பொதுமக்கள் நலத்திட்ட விழாவில் மக்கள் முன்பே ஒருமையில் திட்டி, மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் இருவர் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.