திமுக எங்களால் மட்டுமே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் உண்மை கிடையாது என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன் திமுக கூட்டணி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. அக்கட்சிக்கு நீண்ட இழுபறிக்குப் பின் 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மக்களவை இடமும் வழங்கப்பட்டது. தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் தலைமை உத்தரவிட்டதால் திமுகவுடன் இணைந்து அக்கட்சி தேர்தலை சந்தித்தது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்ளாதது மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. இதனிடையே தேர்தல் முடிவில் திமுக கூட்டணி 73 இடங்களைப் பெற்று தோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ்

இதனிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. மேலும் எதிர்வரும் உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த முடிவால் திமுக கடும் அதிருப்தியடைந்தது. அக்கட்சி முதுகில் குத்தி விட்டதாக திமுக தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கூட காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்

இந்த நிலையில் திமுகவின் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஊடகம் ஒன்றில் பதிலளித்துள்ளார். அதில், “திமுக இந்த தேர்தலில் தோற்றார்கள். அதன் விளைவாக நாங்களும் தோற்றோம். சில சமயங்களில் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார்கள். அதற்கும் நாங்கள் தான் காரணம் என சொல்ல முடியுமா?. அதனால் எங்களால் மட்டுமே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையல்ல.

திமுக செய்தித் தொடர்பாளர்கள் முதுகில் குத்தி விட்டோம் போன்ற சொற்களைப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இப்படி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். 2011 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகும் நாங்கள் திமுகவை ஆதரித்தோம் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் அக்கட்சி எங்களைக் கைவிட்டு 2011 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார்கள். 2013 ஆம் ஆண்டு திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து வெளியேறினார்கள்.

அப்போது யார் எங்களுக்குப் பின்னால் குத்தினார்கள்?. 2016 ஆம் ஆண்டு காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். அதனால்தான் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டது, அதன் விளைவாக சுமார் 95 இடங்கள் கிடைத்தன. திமுகவுடனான நட்பிற்காக காங்கிரஸ் கட்சி நிறைய தியாகம் செய்துள்ளது. நாங்களும் எங்கள் இடங்களை இழந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய மதச்சார்பற்ற தளங்கள் உள்ளன. நாங்கள் திமுகவின் மதச்சார்பின்மையை மதிக்கிறோம்” என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.