பராமரிப்பு மையத்தில் பணியில் இருந்த இளம்பெண்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் Cardiac Care Technology படித்து வரும் நிலையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் முதியோர்கள் பராமரிப்பு மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக Cardiac Care பயிற்சியில் உள்ளார். கடந்த 27.07.2025 அன்று மாலை அப்பெண் பராமரிப்பு மையத்தில் உள்ள ஒரு அறையில் சுயநினைவு இல்லாத ஒரு நோயாளியை கவனித்து கொள்ளும் பணியில் இருந்த போது , அங்கு பராமரிப்பு மையத்தில் வார்டு பாயாக வேலை செய்து வரும் ரைசன் மராண்டி என்பவர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரைசன்மராண்டி ( வயது 33 ) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரைசன்மராண்டி என்பவர் நந்தனம் பகுதியில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கி , மயிலாப்பூரில் உள்ள தனியார் முதியோர்கள் பராமரிப்பு மையத்தில் வார்டு பாயாக வேலை செய்து வருவது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ரைசன்மராண்டி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 3 நபர்கள் கைது. 3 பெண்கள் மீட்பு

சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப் படையினர் வியாசர்பாடி எம்.கே.பி நகர், சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில் , பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி வீட்டில் சோதனை செய்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 38 ) மற்றும் ஜப்பார்பூரி ( வயது 33 ) மற்றும் மோகன் ( வயது 40 ) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.

வாடகை வீடு எடுத்து பாலியல் தொழில்

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 நபர்கள் சேர்ந்து, மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 3 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.