கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற நோய் தொற்று இந்தியா உட்பட உலகையே அச்சுறுத்தியது. அதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா நோய் தொற்று பரவி பல லட்ச மக்களின் உயிரை பறித்தது. பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. 2022 இறுதிக்கு பிறகு கொரோனா தொற்று குறித்து எந்த செய்தியும் இல்லை. உலக நாடுகள் பழைய நிலைக்கு திரும்பின. மக்களும் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் வர தொடங்கி உள்ளது. ஒரு சில வெளி நாடுகள் உட்பட இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நாடு முழுவதும் 363 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ள நிலையில், மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என்றும், பொது இடங்கள் மற்றும் பயணங்களின்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாவட்ட சுகாதார அதிகாரிகள் தினந்தோறும் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

படுக்கை வசதிகள், காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஓமைக்ரான் ஜேஎன்-இன் மாறுபாடான எல்எஃப்7 என்ற வகையான உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருகிறது. சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, பயணங்களின் போது முகக்ககவசம் அணிய வேண்டும். அதேபோல, மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மே 22 ஆம் தேதி 257 பேருக்கும், மே 26 ஆம் தேதி 1,010 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே இந்த பாதிப்பு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. நாட்டில் புதிதாக 363 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3,758 ஆக அதிகரிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 1,400 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜாராத்தில் 320 பேருக்கும், மேற்கு வங்கத்தல் 287 பேருக்கம், மஹாராஷ்டிராவில் 485 பேருக்கும், டெல்லியில் 436 பேருக்கும், கர்நாடகாவில் 238 பேருக்கும், தமிழகத்தில் 199 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 147 பேருக்கும், ராஜஸ்தானில் 62 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.