நாமக்கல் : கடன் தொல்லையால் 5 லட்சம் ரூபாய்க்கு கிட்னியை விற்பனை செய்தேன் என பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளி பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிட்னி புரோக்கர் மற்றவர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் ஒரு கிட்னியை விற்பனை செய்ய வைத்துள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

5 லட்சத்திற்கு கிட்னி விற்பனை செய்த விசைத்தறி தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகரை சேர்ந்த கிட்னி புரோக்கர் ஆனந்தன், 45, அப்பகுதியை சேர்ந்த கவுசல்யா, விஜயா என, இரண்டு பெண் தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் ஒரு கிட்னியை விற்பனை செய்ய வைத்துள்ளார். இதேபோல் பல பெண்களிடம் பேசி, கிட்னி விற்பனை செய்ய வைத்துள்ளார். தலைமறைவான ஆனந்தை இரண்டு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர், மொபைல் போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடன் கொடுத் தவர்கள் தகாத வார்த்தைகளில் பேசினர்

ஆடியோவில் அவர் பேசியதாவது: எனக்கு கடன் பிரச்னை இருந்தது. கடன் கொடுத் தவர்கள் தகாத வார்த்தைகளில் பேசினர். இதனால் கிட்னியை விற்க முடிவு செய்து புரோக்கரிடம் தெரிவித்தேன். அவர்கள், பெரம்பலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கிட்னி எடுத்துக் கொண்டனர். இது நடந்து ஐந்து மாதமாகிவிட்டது. தற்போது நல்லா தான் இருக்கிறேன்.

ஆனால், கடினமான வேலை செய்ய முடியவில்லை. கிட்னி விற்பனைக்கு, 5 லட்சம் ரூபாய் கொடுத்தனர். மருத்துவ சிகிச்சை முழுதும் அவர்களே பார்த்துக் கொண்டனர். பரிசோதனைக்கு சென்ற போது, போலீஸ் அதிகாரிகள் என்னை விசாரித்தனர். அவர்களிடம், உறவினருக்கு கிட்னி கொடுக்கிறேன் என, தெரிவித்தேன். அவர்கள், பணத்துக்காக கிட்னி விற்பனை செய்யக்கூடாது: அப்படி செய்தால் வழககுபோட்டு உள்ளே வைத்து விடுவேன். பிரச்னை இருந்தால் சொல்லுங்கள் என்றனர். மேலும், அந்த மருத்துவமனையின் டாக்டர், காசுக்காக கிட்னியை விற்பனை செய்யக்கூடாது அப்படி இருந்தால் நான் ஆப்பரேஷன் செய்ய மாட்டேன்' என, தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கையெழுத்து இல்லாமல் கிட்னி எடுக்கக் கூடாது

கிட்னி எடுக்க எந்த மாவட்டத்தில் இருந்து சென்றாலும், அந்த மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து வேண்டும். மாவட்ட ஆட்சியர் கையெழுத்து இல்லாமல் கிட்னி எடுக்கக் கூடாது என, இரண்டு மாதத்திற்கு முன் உத்தரவு போடப்பட்டுள்ளது. தற்போது, கடன் எல்லாம் கட்டி விட்டேன். பள்ளிப்பாளையத்தில் கடன் தொல்லையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எக்காரணம் கொண்டும் பள்ளிப்பாளையத்தில் கடன் வாங்க கூடாது. இவ்வாறு அந்த ஆடியோ முடிகிறது. இந்த ஆடியோவால் விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கிட்னி புரோக்கர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி, பா.ம.க.,வினர் பள்ளிப் பாளையம் போலீசில் நேற்று புகார் அளித்தார். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட செயலர் உமாசங்கர் கூறுகையில், பள்ளிப்பாளை யத்தில் ஏழை தொழிலாளர்களை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி கிட்னி விற்பனை செய்ய வைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள சிட்னி புரோக்கர் ஆனந்தனை, போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. அவரை கைது செய்து, உடந்தையாக இருந்த மேலும் சில புரோக்கர்களையும் கைது செய்ய வேண்டும்,என்றார்.