மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அதிகாலை வேளையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மற்றும் அவரது உறவினரை குடிபோதை கும்பல் ஒன்று வழிமறித்து அடித்துத் துன்புறுத்தி, தங்க நகைகள் மற்றும் செல்போன்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்டமாக நான்கு பேரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் நடந்த கொடூரம்

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம் பெண் ஒருவர், சென்னையிலிருந்து பேருந்து மூலமாக மயிலாடுதுறையை வந்தடைந்துள்ளார். அங்கிருந்து தனது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்குப் புறப்பட்டுள்ளார். காலை சுமார் 4.30 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கழனிவாசல் பகுதியில் உள்ள மங்கைநல்லூர் புறவழிச்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் குடிபோதையில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு கும்பல், அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை திடீரென வழிமறித்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில், இருவரையும் அருகில் இருந்த வாய்க்கால் மதகிற்கு கீழே இருந்த மறைவான பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளது. அங்கு வைத்து இருவரையும் அந்த கும்பல் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளது. தொடர்ந்து, அந்த பெண்ணிடம் இருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் இருவரிடமும் இருந்த இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை அடித்து மிரட்டி பறித்துக்கொண்டு அக்கூட்டம் தப்பியோடியுள்ளது.

காவல்துறை விசாரணை மற்றும் கைது நடவடிக்கை

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், உடனே பெரம்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெரம்பூர் காவல் உதவி ஆய்வாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். தடயங்களைச் சேகரித்தும், அப்பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தியும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர்.

காவல்துறையின் நடவடிக்கையின் காரணமாக, இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை காவல்துறையினர் முதற்கட்டமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நகைகள் மீட்பு மற்றும் சம்பவம் நடந்த விதம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அக்கும்பல் கூட்டு பாலியலில் ஈடுபட்டதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிடுவதற்கு காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.

பொதுமக்களின் கொந்தளிப்பும் குற்றச்சாட்டடும்

இச்சம்பவம் நடந்ததற்கு காவல்துறையின் அலட்சியப் போக்கே முக்கியக் காரணம் என்று அப்பகுதி பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றச்செயலில் ஈடுபட்ட அதே குடிபோதை கும்பல், இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு மங்கைநல்லூர் கடைவீதியில் வீண் தகராறில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளது. அக்கும்பல் தகராறு செய்ததை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவும் செய்துள்ளார்.

இரவு நேரத்திலேயே அந்த கும்பல் மீது பெரம்பூர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், அதிகாலையில் இத்தகைய கொடூரச் சம்பவம் நடந்திருக்காது என்று பொதுமக்கள் ஆத்திரத்துடன் தெரிவிக்கின்றனர். இரவு நேரத்தில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தாமலும், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமலும் காவல் துறை அலட்சியமாகச் செயல்பட்டதே இந்த துயரச் சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது என்றும், இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க இரவு ரோந்தை பலப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.