தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று மற்றும் இன்று என 2 நாட்கள் நடைபெறும் மருத்துவக்கல்வி திருவிழாவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி தொடக்கி வைத்தார். இந்த மருத்துவக்கல்வி திருவிழா மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்காக நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சார்பில் மத்திய மண்டல அளவிலான மருத்துவக்கல்வித் திருவிழா தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மருத்துவக்கல்வி திருவிழா இன்றும் நடக்கிறது. மருத்துவ கல்வியில் புதுமைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஊக்கமளித்தல் என்ற தலைப்பில் இந்த திருவிழா நடக்கிறது.

இதன் தொடக்க விழாவில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நேற்று தொடங்கிய இந்த விழாவிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி தலைமை வகித்தார். துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவ திருவிழா ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் டாக்டர் விஜயசண்முகம், இணை செயலாளர்கள் ஜோஸ்பின்பிரியா, நிலவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் தனது உரையில், நவீன மருத்துவக்கல்வியில் திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ராமசாமி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு பேசினர். இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2 நாட்கள் நடைபெறும் இந்த கல்வித்திருவிழாவில் மருத்துவ கல்வியில் ஊக்கமளிக்கும் கற்பித்தல், கற்றல், முறைகள், ஈடுபாட்டுடன் கூடிய திறன் ஆய்வகங்கள், செயல் விளக்கங்கள், பல்வேறு தகவல்களுடன் கூடிய சுவெராட்டிகள் இடம்பெறுதல், விளையாட்டு அமர்வுகளும் நடைபெறுகிறது.

மருத்துவக் கல்வி திருவிழா, மருத்துவ கற்பித்தலில் புதுமை, தரம் மற்றும் இணைந்த கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் மருத்துவ பேராசிரியர்கள், நிபுணர்கள் கலந்துகொண்டு பேசுகின்றனர். இது மருத்துவக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிகச்சிறந்த பயிலரங்கம் போல் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.