மதுரையில் டங்க்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முகிலன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கனிம வளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மனு

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கனிம வளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். அதில் "மதுரை மாவட்டம் மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. டங்ஸ்டன் கனிமம் எடுக்க வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்ஸ் எனும் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. டங்ஸ்டன் கனிகம் எடுக்க அனுமதித்தால் முத்துவேல்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாப்பட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதோடு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாப்பட்டி பல்லுயிர் தளம் பாதிக்கப்படும்.

- Madurai Market : தமிழகத்தின் முதல் உழவர் சந்தை, கலைஞரின் முத்தான திட்டம்.. வெற்றிகரமான 25-வது ஆண்டு

மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசிடம் எந்தவொரு அனுமதியும் பெறவில்லை

ஆகவே டங்ஸ்டன் கனிமம் எடுக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது" என மனுவில் தெரிவித்துள்ளனர், மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறுகையில் "மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசிடம் எந்தவொரு அனுமதியும் பெறவில்லை. கனிமம் எடுக்க தமிழக அரசிடம் மத்திய அரசு தடையில்லா சான்று பெற வேண்டும். மதுரையில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாக அவ்வப்போது புரளியாக கூறப்படுகிறது, தங்களின் கோரிக்கை மனுவை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்" என கூறினார்.

எப்போதும் அனுமதிக்கமாட்டோம்

மேலும் அளித்த பின் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...,” தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டின் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்படி டங்க்ஸ்டன் சுரங்க ஆலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. மதுரை மேலூர் பகுதியை மதுரையின் பண்பாட்டு மண்டலமாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். வேதாந்தாவின் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பைத் தடுத்த நிறுத்த வேண்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கனிமவளக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஐக்கிய சமூக நீதிப் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் தேச மக்கள் முன்னணி, தமிழ் தேச குடியரசு இயக்கம், நாணல் நண்பர்கள்,தமிழ் தேசிய பேரியக்கம், பெண்கள் எழுச்சி இயக்கம், அரிட்டாபட்டி ஏழு மலைகள் பாதுகாப்பு இயக்கம் நாணல் நண்பர்கள், பரம்பு மலை பாதுகாப்பு இயக்கம், மகளிர் ஆயம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கச்சைகட்டி மாற்றத்தின் இளைஞர் குழு உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முதற்கட்டமாக மனு அளித்தோம்” என தெரிவித்தனர்.