மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள பிரபல திரையங்கு கட்டடத்தில் தீ விபத்து பற்றி எரியும் தீயால் கட்டடம் முழுமையாக இடியும் அபாயம் - தீயை அணைக்கும் பணியில் தீவிரம் காட்டும் தீயணைப்புத்துறையினர்.

பொம்மை பொருட்கள் குடோனில் திடிரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மேற்கு கோபுரம் அருகேயுள்ள மேற்கு கோபுர வீதி பகுதியில் 1939ஆம் ஆண்டு முதல் பழமையான சென்ட்ரல் தியேட்டர் செயல்பட்டுவந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் போதிய ரசிகர்கள் வருகையின்மையால் தியேட்டர் மூடப்பட்டது. இதையடுத்து சென்ட்ரல் தியேட்டர் கட்டிடத்தில் கீழ் பகுதி வாகன நிறுத்துமிடமாகவும், மேல்தளம் பொம்மை விற்பனை நிறுவனம் ஒன்றின் குடோனாகவும் செயல்பட்டுவந்தது. மீனாட்சியம்மன் கோவில் குடமுழக்குவிழா வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் யாகசாலை இன்று மாலை தொடங்கியது. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி பழமையான கட்டங்கள் குறித்து தீயணைப்புத்துறையினர் சோதனை நடத்திவந்தனர். இதனிடையே மேற்கு கோபுரம் அருகேயுள்ள பழமையான சென்ட்ரல் தியேட்டரின் முதல்தளத்தில் உள்ள பொம்மை பொருட்கள் குடோனில் திடிரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீயானது பரவ தொடங்கி மளமளவென பற்றி எரிகிறது. இதனால் கட்டடம் முழுவதும் சேதமடைந்து இடிந்துவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக எரியும் தீயை அணைத்துவருகின்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். குடமுழக்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த தீயணைப்பு நிலைய வாகனங்கள் மற்றும் தீயணைப்புத்துறையினரும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக எரியும் தீயை அணைத்துவருகின்றனர். இருந்தபோதிலும் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டிடத்தின் அருகே உள்ள குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் உடனடியாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட திரையரங்க கட்டிடத்தில் உள்ளே பணியாளர்கள் யாரும் இருந்தார்களா என்பது குறித்து தீயணைப்பு துறை என தேடி வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயை அணைக்கும் பணி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கோயிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திடீரென பழமையான கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீ பரவி வருவதால் நகர் முழுவதிலும் கரும்புகை வானுயர அளவிற்கு எழும்பி இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பழமையான கட்டடம் என்பதால் ஒரு புறம் இடிந்துவிழுந்துள்ள நிலையில் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளதால் தீயணைப்புத் துறையினரும் மிகுந்த கவனத்தோடு தீயை அணைத்து வருவதால் தீயை அணைக்கும் பணி தாமதம் ஏற்பட்டு வருகிறது