மதுரை அழகர்கோயில் கள்ளழகர் கோயிலுக்கு புதிய ஜீயரை தேர்வு செய்ய திருக்குறுங்குடி ஜீயர், ஆழ்வார் திருநகரி ஜீயர், பெரிய நம்பிகள் சுவாமி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து, மூவரும் நேரிலோ அல்லது காணொலியிலோ ஆலோசித்து புதிய ஜீயரை தேர்வு செய்ய மதுரை அமர்வு உத்தரவு.

கள்ளழகர் கோயிலில் ஜீயர் பதவி 8 தசாப்தங்களாக காலியாக உள்ளது

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன், மதுரை அமர்வில், "அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் ஜீயர் பதவி பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. கோயிலில் பாரம்பரிய வழக்கப்படி சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ‘ஜீயர் பதவி மிகவும் அவசிய மானதாகும். அதன்படி கள்ளழகர் கோயிலில் ஜீயரை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் அமர்வு, "மதுரை கள்ளழகர் கோயிலில் ஜீயர் இருந்துள்ளார். கடைசி ஜீயர் 1940-களில் விலகியுள்ளார். அதன் பிறகு ஜீயர் பதவி காலியாகவே உள்ளது. கள்ளழகர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். கள்ளழகர் கோயிலில் ஜீயர் பதவி 8 தசாப்தங்களாக காலியாக உள்ளது. அனைத்து சூழல்களிலும் வழக்கமான மரபுகளே முதன்மை பெற வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சினை எழுந்தால் அவற்றைச் சரிசெய்து மீண்டும் மரபுகளை நிலைநாட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடைசியாக 1937-ல் ஜீயர் நியமிக்கப்பட்டார். அவர் 1946 வாக்கில் விலகியதாக தெரிகிறது. அதனால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப உட னடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக இப்போது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூற முடியாது. . அதற்கு முன்பும் அறநிலையத் துறை சட்டங்களும், விதிகளும் அமலில் இருந்துள்ளன.

மத நிறுவனங்களின் மீது அரசாங்கம் அதிகாரம் செலுத்தி வருகிறது.

எப்போதும் மத நிறுவனங்களின் மீது அரசாங்கம் அதிகாரம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து மத நிறுவனங்களின் விஷயத்தில் மட்டுமே கடுமையான நடவடிக் கைகளை எடுக்கும் துணிச்சல் அரசிடம் இருந்தது. அறநிலையத் துறை சட்டத்தின் 60-வது பிரிவில் தற்காலிக ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம் எனக் கூறப் பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமன நடைமுறைகள் கள்ளழகர் கோயில் ஜீயர் நியமனத்துக்கும் பொருந்தும். அதேநேரத்தில் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் வாரிசை நியமிக்காமல் மறைந்ததால் ஸ்தலத்தார்கள் புதிய வாரிசை தேர்வு செய்ய வேண்டும். அழகர்கோயிலில் ஸ்தலத்தார்கள் யாரும் இல்லை.

நீதிமன்றம் தலையிட வேண்டியது அவசியமாகிறது.

கள்ளழகர் கோயில் ஜீயர் மடம் 80 ஆண்டுகளாகத் தலைவரற்ற நிலையில் இருப்பதால், அதன் சீடர்களை கண்டுபிடிப்பது இருட்டில் தடவித் தேடுவது போன்ற கடினமான செயலாகவே இருக்கும். எனவே, இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது அவசியமாகிறது. அதன்படி கள்ளழகர் கோயில் ஜீயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு திருக்குறுங்குடி ஜீயர், ஆழ்வார்திருநகரி ஜீயர், பெரிய நம்பிகள் சுவாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் மதுரை கள்ளழகர் கோயில் ராமானுஜ ஜீயர் மடத்தின் அடுத்த ஜீயரை தேர்ந்தெடுக்க வேண்டும். மூவரும் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ தங்களுக்குள் ஆலோசித்து முடிவெடுக்கலாம். இந்தச் செயல்முறை விரைவு படுத்தப்பட்டு, கள்ளழகர் கோயிலுக்கு மிக விரைவில் ஒரு சிறந்த ஜீயர் நியமிக்கப்படுவார் என நம்புகிறோம். ஜீயர் தேர்வு செய்யப்பட்டதும் அறநிலையத்துறை முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.