மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்களுக்காக விரிவான மருத்துவ ஏற்பாடுகள்.

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, மதுரை மாநகராட்சி மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனை சார்பில் பக்தர்களுக்கான விரிவான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக 06.09.2026 முதல் 16.09.2026 வரை, 4 கோபுர உட்புற பகுதிகளிலும் பொதுமக்களின் வசதிக்காக மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 17.09.2026 கும்பாபிஷேக நாளன்று, பக்தர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் வகையில் 27 இடங்களில் மொத்தம் 54 மருத்துவ முகாம்கள் மூன்று அடுக்குகளாக சுழற்சி முறையில் செயல்படும். கோயில் மேற்கூரை பகுதியில் சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட 7 மருத்துவ முகாம்களும், கோயில் உட்புறத்தில் 6 மருத்துவ முகாம்களுடன், திருவள்ளுவர் மண்டபத்தில் மேம்பட்ட உயிர்காக்கும் சிகிச்சை (ALS) வசதியுடன் கூடிய ஒரு சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவை வழங்கப்படும்

கோயில் சுற்றுப்புறத்தில் 5 மருத்துவ மையங்கள் மூலம் மருத்துவ சேவை வழங்கப்படும். இதில் 4 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும், மேற்கு பிர்லா ஹவுஸ் மருத்துவ மையமும் அடங்கும். மேற்கு பிர்லா ஹவுஸ் மருத்துவ மையம் மேம்பட்ட உயிர்காக்கும் சிகிச்சை (ALS) மையமாக செயல்படும். மேலும், பக்தர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்கும் வகையில் 8 நடமாடும் மருத்துவக் குழுக்கள் (MMU) மற்றும் 12 அவசர ஊர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளன. இதில் 10 அவசர ஊர்திகளுடன், 2 இருசக்கர அவசர ஊர்திகள் (108 Bike Ambulance) இடம்பெறும். மருத்துவ முகாம்களில் உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய மற்றும் மேம்பட்ட மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்கள் போன்ற மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வு

மேலும், பொதுக் கூட்டங்கள் அல்லது திருவிழாக்கள் போன்ற மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளில் (Mass Gatherings), பொதுச் சுகாதார விதிமுறைகளின்படி நோய்ப் பரவல் முறைகள், குறிப்பிட்ட நோய்கள் அல்லது சுகாதாரப் போக்குகளைக் கண்காணித்து, தேவையான தரவுகளைச் சேகரிக்கும் வகையில் Syndromic Surveillance (அறிகுறி அடிப்படையிலான கண்காணிப்பு) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவப் பணிகளுக்காக 70 மருத்துவர்கள், 150 மருத்துவப் பணியாளர்கள், 15 செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் மற்றும் 40 வாகன ஓட்டுநர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதுடன், மேல் சிகிச்சை தேவைப்படுவோரை 108 அவசர ஊர்தி மூலம் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில், அவசர நோயாளிகளைப் பெறுவதற்காக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முன்னிறுத்தி, விழா முழுவதும் தடையற்ற அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் இந்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.