தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு

தமிழ்நாடு முதலமைச்சர், சென்னையில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி இன்று (08.01.2026) மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் கிராமம், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் மேலூர் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு 2026 வழங்கினார்.

ரூ.3000-ம் வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தாவது...,” தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் தைப்பொங்கலுக்கு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.3000-ம் வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று 08.01.2026 முதல் தொடங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை. ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.3000-வழங்க மொத்தம் ரூ.6936.17- கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிட்டு அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 1389 நியாயவிலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 9,46,728 அரிசி பெறும் குடும்ப அட்டைதரார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு வழங்க தோராயமாக மற்றும் ரொக்கத் தொகை ரூ.3000- வழங்க மொத்தம் ரூ.287.61- கோடி செலவில் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

200 நபர்களுக்கு டோக்கன்

பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி, சேலையும் அனைத்து நியாயவிலைக்கடைகள் மூலமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்காக காலை மற்றும் மாலை என நாள் ஒன்றுக்கு 200 நபர்களுக்கு டோக்கன் வழங்கி பணம் பெற்றுக்கொள்ளவும், வெளியூர் சென்று இருந்தால் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கி அதற்கான நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுவரை வழங்கிடாத வகையில் இந்த ஆண்டு அதிகமாக ரூ.3,000- ரொக்கத்தொகை வழங்கியும், 20 ஆண்டுகாலமாக அரசு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கையான ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த ஆணை வழங்கியும் உள்ளார்கள் என அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மேலூர் நகர்மன்ற தலைவர் யாசின் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.