மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை – கூடல் நகர் இடையே முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.

ஆனால், தீ விபத்தில் கோவிலின் வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்ததால், அதன் சீரமைப்பு பணிக்காக கும்பாபிஷேக விழா தாமதம் ஆனது. தற்போது வீரவசந்தராயர் மண்டப பணிகள் நிறைவு பெற்று, கடந்த 30-ந் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் அதனை பார்வையிட்டனர்.

இதற்கிடையே பல மாதங்களாக ராஜகோபுரம் உள்பட கோவிலின் அனைத்து இடங்களிலும் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடந்து நிறைவு பெற்று கும்பாபிேஷகத்துக்கு கோவில் தயார் ஆனது. அதன்படி 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக பல லட்ச ரூபாய் மதிப்பில் வடக்கு ஆடி வீதியில் பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டு, முதல் கால யாக பூஜை கடந்த 11-ந் தேதி மாலையில் தொடங்கியது.நேற்று காலையில் 8-ம் கால யாக பூஜையும், மாலையில் 9-ம் கால யாக பூஜையும் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் இந்த பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலயில், மதுரைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தாம்பரம் மதுரை இடையே முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன. தாம்பரத்தில் இருந்து நாளை (செப்.16) மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில்(06159),மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரை வந்தடையும். செப்.17ம் தேதி மதுரையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ரயில்(06160), இரவு 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல் வழியாக ரயில் இயக்கப்படும்

இதேபோல் நெல்லையில் இருந்து செப்டம்பர் 16ஆம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் (06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து பின்னர் இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடையும். சிறப்பு ரயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.