செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான சாலையை 8 வழி சாலை

சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியாலும் அதன் உள் கட்டமைப்பு வசதிகளாலும் உச்சம் அடைந்து வருகின்றன.இதேபோல் பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் சென்னை நகரத்துக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் நீடித்து வருகிறது.சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக்குள் வந்து செல்கின்றன. காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதேபோல மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வாகன பயணம் மிக மோசமாக இருக்கும்.

மக்கள் தொகை பெருக்கதால் வாகனங்களும் பெருகி விட்டன

மக்கள் தொகை பெருக்கதால் வாகனங்களும் பெருகி விட்டன. இதனால் சென்னை கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பீக் அவர்ஸ் என சொல்லப்படும் அலுவலகம், பள்ளி செல்லும் மற்றும் திரும்பும் நேரங்களில் சாலைகளில் இடைவெளியை பார்க்க முடியாத அளவுக்கு வாகனங்களாக சென்று கொண்டிருக்கும். ஏதாவது ஒரு இடத்தில் வாகனங்கள் ஒரு ஐந்து நிமிடம் ஜாம் ஆனால் சென்னை சாலைகள் மொத்தமாக ஸ்தம்பித்து விடும்.

உதாரணமாக பெரும்களத்தூரில் வாகனங்கள் கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் ஒரு 5 நிமிடம் ஜாமாகி நின்று விட்டால், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நகர முடியாமல் நின்று விடும். இதனால் பொதுமக்களால் குறித்த நேரத்துக்கு சேர வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாது. இதற்கு ஒரே தீர்வு சாலைகளை விரிவாக்கம் செய்வதுதான். செங்கல்பட்டு- திண்டிவனம் இடையே 67.1 கி.மீட்டர் நீளத்திற்கு 4 வழிச்சாலையாக உள்ளது. அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து மற்றும் நெரிசல் காரணமாக இந்த சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

செங்கல்பட்டு-திண்டிவனம் 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது

தற்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.3,853 கோடி செலவில் செங்கல்பட்டு-திண்டிவனம் இடையிலான 67.1 கி.மீ. ஜிஎஸ்டி சாலையை, இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் 6 அல்லது 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், ECR இசிஆர் பிரிவின் மரக்காணம்-புதுச்சேரி இடையிலான 47 கி.மீ தொலைவை ரூ.1,943 கோடி முதலீட்டில் 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.

TN Industrial & Investment Updates தனது X பக்கத்தில் இந்த செய்தியை பதிவிட்டு இருந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த வேலைகளை விரைவாக தொடங்கி நிறைவு செய்தால், சாலைகளில் வாகன நெரிசல் குறைவதோடு, மக்களும் சரியான நேரத்துக்கு சென்றடைய முடியும். செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான சாலையை 8 வழி சாலையாக மேம்படுத்தினால், தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கான பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கபடுகிறது.