தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மகளை கொடூரமாக கொலை செய்த வாலிபரை பழிக்குப் பழியாக இன்று அதிகாலை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த ஊராட்சி முன்னாள் தலைவர் உட்பட நான்கு பேர் போலீசில் சரணடைந்தனர்.

தஞ்சாவூர் அருகே பிராந்தை பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் புண்ணியமூர்த்தி (53). தி.மு.க., ஆலங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது மகள் காவியா (26). இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்கள் கிராமத்திற்கு பக்கத்து கிராமமான மேலகளக்குடியை சேர்ந்தவர் கருணாநிதி என்பவரின் மகன் அஜித்குமார் (30). பெயிண்டர்.

காவியாவும், அஜித்குமாரும், கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், காவியாவின் பெற்றோருக்கு, அஜித்குமாரை திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை. இதையடுத்து காவியாவை அவரது பெற்றோர் வற்புறுத்தி, உறவுக்காரரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க, நிச்சயதார்த்தம் செய்தனர். இருப்பினும், நிச்சயதார்த்தம் நடந்த தகவலையும், அதற்கான போட்டோக்களையும் அஜித்குமாருக்கு, காவியா அனுப்பி உள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அஜித்குமார் கடந்த 2025ம் ஆண்டு நவ.27ம் தேதி காலை, வழக்கம் போல, பள்ளிக்கூடத்திற்கு வந்த காவியாவை வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் ஆவேசமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியா தலையில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த காவியா சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் அஜித்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையறிந்த காவியாவின் தந்தை புண்ணியமூர்த்தி, தன் மகளை கொலை செய்த, அஜித்குமாரை பழி தீர்க்கும் விதமாக கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, புண்ணியமூர்த்தி தனது உறவினரான ஆலங்குடி, கன்னித்தோப்பு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் லோகேஷ் (22), துரைராஜ் மகன் ராமலிங்கம் (30), புலவர்நத்தம் பகுதியை சேர்ந்த அமுதன் மகன் கருப்பையா (55), ஆகியோருடன் இன்று (25ம் தேதி) அதிகாலை 2:00 மணிக்கு, அஜித்குமார் வீட்டுக்குள் புகுந்து துாங்கிக்கொண்டிருந்த அஜித்குமாரை அரிவாளால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இதில் தலை, கழுத்து என பல இடங்களிலும் பலத்த காயமடைந்த அஜித்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அஜித்குமாரை கொலை செய்த புண்ணியமூர்த்தி, லோகோஷ்,ராமலிங்கம், கருப்பையா ஆகிய நான்கு பேரும், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர். இதையடுத்து மெலட்டூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமார் உடலை கைப்பற்றி, பிரதே பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளை கொலை செய்த வாலிபரை பழிக்கு பழியாக, தந்தை படுகொலை செய்த சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.