நாடு முழுவதும் பெட்ரோல் பங்க் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. பொதுமக்கள் வசதிக்காக நகர்புறங்களில் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 2015 ஆம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் அளவிலேயே இருந்த பெட்ரோல் பங்க்களின் எண்ணிக்கை, தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, வாகனப் பயன்பாட்டின் அதிகரிப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், கிராமப்புற இணைப்பு திட்டங்கள் மற்றும் எரிபொருள் கிடைப்பை அனைவருக்கும் எளிதாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

குறிப்பாக, முன்பு நகரங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் மட்டுமே அதிகமாக இருந்த பெட்ரோல் பங்குகள், தற்போது கிராமப்புறங்களையும் அதிகமாக சென்றடைந்துள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மொத்த பெட்ரோல் பங்க்களில் கிராமப்புறங்களின் பங்கு 22 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது அது 29 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமங்களில் பெட்ரோல் பங்க் அதிகரித்ததால், நீண்ட தூரம் பயணம் செய்து எரிபொருள் வாங்க வேண்டிய நிலை பல இடங்களில் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் பெட்ரோல் பங்க் நெட்வொர்க்கில் அரசு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. மொத்த பங்க்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இதில் இந்தியன் ஆயில் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி இருக்கின்றன. இதனால், சரக்கு போக்குவரத்து நாடு முழுவதும் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. வாகன பெருக்கத்திற்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் நிரப்பும் பெட்ரோல் பங்க் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக 2015 முதல் ஊரகப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் புதிது புதிதாக பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியுடன் அதன் எண்ணிக்கை ஒரு லட்சத்து 266 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக பெட்ரோல் பங்க் உடைய நாடுகளில் நமக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. மத்திய எண்ணெய் பல அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள பெட்ரோல் பங்குகளில் 90 சதவீதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. தனியார் நிறுவனத்தில் ரஷ்யாவின் நயாரா எனர்ஜி நிறுவனம் மொத்தம் 6921 பெட்ரோல் பங்குகள் இயக்கி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 2114 பெட்ரோல் பங்குகளும் செல் நிறுவனங்களும் 346 பங்குகளும் திறந்துள்ளன. கடந்த 2015ல் இதன் எண்ணிக்கை 50,451 ஆக இருந்து நிலையில் தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 2228 பெட்ரோல் பங்க் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.