தஞ்சாவூர்: பொறுத்தது போதும்... பொங்கி எழு என்று பஸ் வசதி இல்லாததால் தாமதமாக கல்லூரிக்கு செல்வதால் தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் நிலை உள்ளது என்று கூறி மாணவிகள் அரசு பஸ்சை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வெட்டிக்காட்டில் இருந்து ஒரத்தநாடு அரசு கலைக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால், தாமதமாக கல்லுாரிக்கு சென்றால், ஆப்சென்ட் போடுவதால், கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தி மாணவிகள் அரசு பஸ்சை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இப்பஸ் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவோணம், ஊரணிபுரம், சில்லத்துார், வெட்டிக்காடு வழியாக செல்கிறது. இதில், காலை 7:30 மற்றும் 8:30 மணிக்கு என இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் இருந்து, ஒரத்தநாட்டில் உள்ள அரசு கலை கல்லுாரிக்கு செல்லும் சுமார் 1,500 மாணவிகள் படிக்காட்டில் நின்று பயணம் செய்ய வேண்டி உள்ளது. மேலும், சில மாணவிகள் வெட்டிக்காட்டில் இருந்து வேன், டூ வீலர்களில் லிப்ட் கேட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், கல்லுாரிக்கு காலதாமதமாக செல்வதால், அடையாள அட்டையை பறிமுதல் செய்வதோடு, வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டு விடுவதாக மாணவிகள் வேதனையடைந்து வந்தனர்.

இதில், பாதிக்கப்படும் மாணவிகள் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கூடுதலாக பஸ் இயக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மாணவிகள் கறம்பக்குடியில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்த அரசு டவுன் பஸ் எண்– 36 யை, வெட்டிகாட்டில் சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு ஆதரவாக, அப்பஸ்சில் வந்த கல்லுாரி மாணவிகளும் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, ஒரத்தநாடு போக்குவரத்து டெப்போ அலுவலர்கள், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், காலை மற்றும் மாலை கூடுதல் பஸ் இயக்கப்படும் என உறுதியளித்தின் பேரில், போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர். பிறகு, ஒரத்தநாட்டில் இருந்து ஒரு பஸ் வரவழைக்கப்பட்டு மாணவிகள் அதில் அழைத்து செல்லப்பட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவிகள் தரப்பில் கூறுகையில், பலமுறை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டோம். கூடுதல் பஸ் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடில் மீண்டும் போராட்டம் நடத்த நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். தினமும் தாமதமாக கல்லூரிக்கு செல்வதால் ஆப்சென்ட் போட்டு விடுகின்றனர். மேலும் இதனால் கல்வி கற்கும் நிலையும் பாதிக்கப்படுகிறது. இது தற்காலிக தீர்வாக இருக்கக்கூடாது. நிரந்தரமான தீர்வாக இருக்க வேண்டும். மிகவும் சிரமான நிலையில்தான் எங்களை பெற்றோர்கள் கல்லூரியில் சேர்த்துள்ளனர். ஆனால் கூடுதல் பஸ் இல்லாததால் எங்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.