உலக நாடுகள் புதியவற்றை கண்டுபிடிக்க பணம் செலவிடும் நேரத்தில், புராணங்களை உண்மை எனக் கூறி மத்திய அரசு செலவு செய்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார். கல்வி, விவசாயம், மின்துறை உள்பட பல துறைகள் சார்ந்து மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவை, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் நோக்கில் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

"இந்திய வரலாற்றை மாற்றி எழுத முயற்சி"

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வரைவு விதிகளுக்கு எதிராக கல்வியாளர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றன. இந்த நிலையில், கேரள திருவனந்தபுரத்தில் UGC வரைவு விதிகளுக்கு எதிராக தேசிய கருத்தரங்கு நடந்தது.

இதில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா துணை முதலமைச்சர் பட்டி விக்ரமர்க மல்லு, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் மத்திய பாஜக அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய பினராயி விஜயன், "உலக நாடுகள் புதியவற்றை கண்டுபிடிக்க பணம் செலவிடும் நேரத்தில், புராணங்களை உண்மை எனக் கூறி மத்திய அரசு செலவு செய்து வருகிறது. இந்திய வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

கொந்தளித்த பினராயி விஜயன்:

தொடர்ந்து பேசிய அவர், "கல்வி, விவசாயம், மின்துறை உள்பட பல துறைகள் சார்ந்து மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவை, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் நோக்கில் உள்ளது. மாநில அரசுக்கான நிதியை அபகரிக்கும் நோக்கில் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது" என்றார்.

தொடர்ந்து ஆளுநர் விவகாரம் குறித்து பேசிய அவர், "ஆளுநர்கள் நெருப்புடன் விளையாடுவதாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்ட அதிகாரத்தை மீறி செயல்பட முனைந்தனர்" என்றார்.

முன்னதாக, இந்திய மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன், "உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர் யாரும் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு சிறையிலிருந்து விடுதலை பெற விரும்ப மாட்டார்கள், ஆனால், சாவர்க்கர் அதைச் செய்தார். சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக இருந்த சங்கப் பரிவார் அவருக்கு வீரன் என்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறது" என்றார்.