புதுச்சேரி: புதுச்சேரியில் பன்றி காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ஃப்ளுயன்சா குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது பரவி வரும் H1N1 இன்ஃப்ளுயன்சாவில் புதிய மரபணு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், பெரும்பாலான பாதிப்புகள் லேசான தன்மையிலேயே இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே, பன்றி காய்ச்சல் குறித்து பரவும் வதந்திகளை நம்பாமல், நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திடீர் காய்ச்சல், இருமல்

H1N1 பாதிப்பு ஏற்பட்டால் திடீரென காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டைவலி, உடல்வலி, சோர்வு, தலைவலி, மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடல்நிலையை கவனித்து, தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமடையும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

தாங்களாக மருந்து உட்கொள்ள வேண்டாம்

காய்ச்சல் அல்லது சளி ஏற்பட்டவுடன் தாங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக ஆண்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் ஒசல்டமிவிர் போன்ற ஆன்டிவைரல் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. நோயின் தன்மைக்கு ஏற்ப தேவையான மருந்து மற்றும் சிகிச்சையை மருத்துவரிடம் ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடி சிகிச்சை

மூச்சுத்திணறல், மார்பு வலி, மயக்கம், வலிப்பு, சளியில் ரத்தம் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். சாதாரண காய்ச்சல் அல்லது இருமல் என அலட்சியப்படுத்தாமல், உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

நோய் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை

H1N1 பரவலைத் தடுக்க பொதுமக்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றவர்களுடன் நெருக்கமான தொடர்பைத் தவிர்ப்பதுடன், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான போது முகக்கவசம் அணிவதும் பாதுகாப்பான நடவடிக்கையாகும்.

எனவே, “அச்சம் வேண்டாம்... அலட்சியமும் வேண்டாம்” என்ற அணுகுமுறையுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும். H1N1 குறித்து தேவையற்ற பயம் கொள்ளாமல், அறிகுறிகளை அறிந்து கொண்டு, உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்று, சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.