பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம் அம்பேத்கர் தெரு பகுதியில் வசித்து வருபவர் பிரசன்னா குமார் ( வயது 19 ) இவர் ஆறாம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். பிரசன்ன குமாருக்கு பிறந்த நாள் என்பதால் அவரது நண்பர்கள் ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் சரவணன் ஆகியோர் பிரசன்ன குமார் வீட்டிற்கு வந்து அவரை வெளியே அழைத்துச் சென்று போதை ஊசி போட்டு பிறந்த நாள் கொண்டாடலாம் என கூறியுள்ளனர்.

போதை ஊசி செலுத்திய உடன் வந்த நெஞ்சு வலி

மேலும் , அவர்கள் வைத்திருந்த மாத்திரையை தண்ணீரில் கலந்து சரவணன் மற்றும் சஞ்சய் ஆகிய இரு வரும் ஊசி போட்டுக் கொண்டு பிரசன்ன குமாருக்கும் மாத்திரையை கலந்து ஊசி மூலம் அதனை செலுத்தியுள்ளனர். ஊசி போட்ட சிறிது நேரத்தில் பிரசன்ன குமாருக்கு கை மறுத்து போக ஆரம்பித்து திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசன்ன குமார் உடனடியாக வீட்டிற்குச் சென்று தனது சித்தி கேசவர்தனியிடம் கூறி 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையில் ஜிம் பயிற்சியாளரை கத்தியால் வெட்டிய வழக்கில் மூன்று பேர் கைது

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் ( வயது 32 ) இவர் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். இவரது அத்தை மகன் டேவிட் பீட்டர் என்பவருக்கும் பிரசாந்த் என்பவருக்கும் ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் , டேவிட் பீட்டர் பிரசாந்த் வீடு அருகே வந்து , பிரசாந்தை தகாத வார்த்தைகளால் திட்டி தான் வைத்திருந்த கத்தியால் முகத்தில் வெட்டி விட்டு சென்றுவிட்டார். இதில் லேசான காயம் அடைந்த பிரசாந்த் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொடுங்கையூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த டேவிட் பீட்டர் ( வயது 28 ) மற்றும் இந்த சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர்களான ஆல்பர்ட் ( வயது 28 ) சுந்தர் ( வயது 24 ) என மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.