மலையாள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சக போட்டியாளரைக் காதலிப்பதாகத் தெரிவித்த பெண் போட்டியாளரின் பெற்றோர், அவரை நிகழ்ச்சியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேஹா ஃபாத்திமா சந்தோஷ் ராஜ் காதல்

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் சமூக வலைதளப் பிரபலமான நேஹா ஃபாத்திமா போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இவருக்கும் சக போட்டியாளரான சந்தோஷ் ராஜ் என்ற தாஷிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சந்தோஷ் ராஜிடம் தனது காதலை வெளிப்படுத்திய நேஹா, நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் இந்த உறவைத் தொடர விரும்புவதாகவும், அதற்கு தனது பெற்றோர் சம்மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர்

இந்தச் சூழலில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மோகன்லால் முன்னிலையில் நேஹாவின் பெற்றோர் மேடைக்கு வந்தனர். அவரது தந்தை முகமது ஷெமியும் தாயார் ஷாரூபா ஷமீமும் மகளிடம் தங்களுடன் வீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மற்றவர்கள் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும்போது, நேஹா உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏமாற்றப்படுவதாக அவரது தாயார் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். அவரது தந்தையும் மகளிடம் குடும்பத்தை மறந்துவிட்டாயா எனக் கேள்வி எழுப்பினார்.

மோகன்லாலும் தனது மகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகக் குறிப்பிட்டு, நேஹாவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவரது பெற்றோர் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு நேஹா உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சிகள் நிகழ்ச்சியின் முன்னோட்டத்தில் இடம்பெற்றன.

#BBMS8Promo ബിഗ്ഗ്‌ബോസ് വേദിയിൽ കണ്ണീരണിഞ്ഞ് നേഹയുടെ മാതാപിതാക്കൾ Watch 24x7 Live - https://t.co/QbRRqjnIlJ #BiggBoss #BBMS8 #BiggBossMalayalamSeason8 #BiggBossMalayalam #BiggBossSeason8 #Democracy #Mohanlal #Lalettan #JioHotstarMalayalam #asianet https://t.co/9dEIdUDqBI

— asianet (@asianet) October 31, 2026

மதம் கடந்த காதலுக்கு எதிர்ப்பா?

இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பின்மையைப் பின்பற்றும் கேரள மாநிலத்தில், மதம் கடந்த காதலுக்கு பெற்றோர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தொகுப்பாளர் மோகன்லால் முன்னிலையில் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, இந்து - முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த இருவரின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பது, மதம் கடந்த காதல் மற்றும் பெற்றோரின் விருப்பம் குறித்த விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.