மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் முழுமையாகக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைப் பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியரின் நேரடி உத்தரவின் பேரில், மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள மருந்துக்கடைகள் மற்றும் முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையின்போது, போதை மருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் தடுத்து நிறுத்தப்படுவது குறித்த விழிப்புணர்வும், கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஆய்வுக் குழுவின் அதிரடி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் அதிகாரிகள் திடீர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இக்கூட்டு ஆய்வுக் குழுவில், மயிலாடுதுறை மருந்து ஆய்வாளர் சுதர்சன், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் (மதுவிலக்கு அமல்பிரிவு) ராஜேஷ் மற்றும் உதவி ஆணையர் (கலால்) மாணிக்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரிக்கு அருகில் உள்ள அப்பகுதி மருந்துக்கடைகளில் இந்தக் குழுவினர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

குறிப்பாக, மருத்துவமனைகளில் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் நார்கோடிக் எனப்படும் போதைத்தன்மை வாய்ந்த வலி நிவாரணி மருந்துகள் உரிய கணக்கின்படி விற்கப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.

மருத்துவர் பரிந்துரைச்சீட்டு கட்டாயம்

மருந்துக்கடைகளில் நார்கோடிக் மருந்துகள் முறைகேடாக விற்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்துக்கடைகளிலும், நார்கோடிக் மருந்துகள் கண்டிப்பாக உரிய மருத்துவரின் பரிந்துரைச்சீட்டுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் தன்னிச்சையாகவோ அல்லது முறையற்ற முறையிலோ இத்தகைய மருந்துகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருந்துக்கடை உரிமையாளர்கள் தங்களது விற்பனைப் பதிவேடுகளைத் துல்லியமாகப் பராமரிக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான முறையில் அடிக்கடி நார்கோடிக் மருந்துகளை வாங்குபவர்கள் குறித்த விவரங்களைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரியர் நிறுவனங்கள் மீது தீவிரக் கண்காணிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்காக, இணையவழி மற்றும் கொரியர் சேவைகள் மூலமான கடத்தல்களையும் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். வடமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கூரியர் நிறுவனங்கள் வாயிலாக மயிலாடுதுறை பகுதிக்கு போதைப்பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து கொரியர் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், மேலாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு பார்சலையும் அல்லது கொரியரையும் பெறக் கூடாது எனவும், சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் வந்தால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சட்டப்படி கடுமையான நடவடிக்கை - எச்சரிக்கை

இத்தகைய ஆய்வுகளின் முக்கிய நோக்கம் மாவட்டத்தில் உள்ள இளம் தலைமுறையினரை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பதே ஆகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவுகளை மீறி, விதியை மீறி நார்கோடிக் மருந்துகளை விநியோகிக்கும் மருந்துக்கடைகள் மீது உடனடியாகச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், கொரியர் நிறுவனங்கள் மூலமாகச் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களைப் பெற்று விநியோகிப்பதில் உடந்தையாக இருக்கும் நபர்கள் மீதும் சமரசமின்றி கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இது போன்ற அதிரடி சோதனைகளையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.