தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு பகுதியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை, கடந்த 12ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த கவிதாசன் (25), அவரது நண்பர்கள் திவாகர் (27), பிரவீன் (20), மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக, இளம்பெண் அளித்த புகாரின் பேரில், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பாப்பாநாடு பகுதியை சேர்ந்த வேல்முருகன், 20 மற்றும் வேல்முருகனின் 17 வயது நிரம்பிய தம்பி இருவருக்கும் தொடர்பு இருந்த நிலையில், போலீசார் இருவரையும் கைது செய்யாமல் இருந்து வந்தனர். இதையடுத்து வேல்முருகன், அவரது தம்பி இருவரையும் கைது செய்யக்கோரி கிராமமக்கள், வணிகர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையில், சம்பவம் நடந்த 12ம் தேதி, ஏற்கனவே கைது செய்யப்பட்ட கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவனுடன், வேல்முருகன் அவரது தம்பி சேர்ந்து டூ வீலரில் வரும் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது.

இதன் அடிப்படையில், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வேல்முருகன் மற்றும் அவரது தம்பி இருவரையும் கைது செய்து, வேல்முருகனை திருச்சி மத்திய சிறையிலும், அவரது 17 வயது தம்பியை தஞ்சாவூர் சிறார் இல்லத்திலும் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த இடத்தில், வேல்முருகன் அவரது தம்பி இருவரும் நின்றுக்கொண்டு, அப்பகுதியில் வேறு யாரும் வருகிறார்களா என கண்காணித்துக் கொண்டு நின்றுள்ளனர். அத்துடன் நடந்த குற்றத்தை மறைக்கும் விதமாக, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தாக வேல்முருகன், அவரது தம்பி செயல்பட்டதாக கைது செய்துள்ளோம் என தெரிவித்தனர்.