Identity

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, வினய் ராய், மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் என பலர் நடித்துள்ளார்கள். கடந்த ஆண்டு அன்வேஷிப்பின் கண்டெத்தும் , ARM என இரு ஹிட் படங்களை கொடுத்த டொவினோ தாமஸ் இந்த ஆண்டு "IDENTITY" படத்தின் மூலம் தனது வெற்றியைத் தொடர்கிறார்.

Identity பட வசூல்

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற சுவாரஸ்யமான திரைக்கதையும் விறுவிறுப்பான காட்சியமைப்புகளுடன் உருவாகி இருக்கும் இப்படம் மொத்தம் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ 1.8 கோடி வசூலித்தது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் அதிகரிக்கவே அடுத்தடுத்த நாட்களில் வசூலும் அதிகரித்தது.

இரண்டாவது நாளில் "IDENTITY" திரைப்படம் 1.3 கோடியும் மூன்றாவது நாளில் 1.65 கோடியும் நான்காவது நாளில் ரூ 6.55 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகளவில் இப்படம் இதுவரை ரூ 23.20 கோடி வசூலித்து இந்த ஆண்டின் முதல் மலையாள வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக டைம்ஸ் நாவ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது

வெற்றியைத் தொடங்கிய மலையாள சினிமா

கடந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அன்வேஷிப்பின் கண்டெத்தும் திரைப்படம் அந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான பிரேமலு , மஞ்சுமெல் பாய்ஸ் , பிரமயுகம் , ஆடு ஜீவிதம் , ஏ.ஆர்.எம் , மார்கோ என வருடத்தின் இறுதிவரை மலையாள சினிமாக்கள் வசூல் குவித்தன. அதே போல் இந்த ஆண்டை வெற்றிகரமாக தொடங்கி வைத்துள்ளார் டொவினோ தாமஸ். கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் அவரது ராசி தொடரும் என எதிர்பார்க்கலாம்.

டொவினோ தாமஸ்

மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். மாயா நதி, மின்னல் முரளி, தள்ளுமாலா முதலிய படங்களின் மூலம் மலையாள ரசிகர்கள் தாண்டியும் கவனமீர்த்தார். இவர் நடித்த 2018 திரைப்படம் சர்வதேச அளவில் கவனமீர்த்தது. இப்படத்திற்காக நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் செப்டிமியஸ் விருது விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றார்.