பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் ரோப்கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப்கார் இயக்கத்துடன் தொடர்புடைய அனைத்து இயந்திரங்களும் NDT எனப்படும் அழிவில்லா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தேவையான புதிய சாப்ட் கொல்கத்தாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பொருத்தப்பட்டதுடன், கியர் பாக்ஸ் உள்ளிட்ட இயந்திரங்களிலும் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் மணல் மூட்டைகளை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வந்ததாகவும், இதன் மூலம் ரோப்கார் இயக்கத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ரோப்கார் கீழ்நிலையத்தில் நடைபெற்று வந்த பெருந்திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக புதிய மேற்கூரை அமைத்தல், ஃபால் சீலிங் பொருத்துதல், பக்கவாட்டு சுவர்களில் கிரானைட் பதித்தல் உள்ளிட்ட சிவில் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரோப்கார் இயந்திரங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் கீழ்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சிவில் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வல்லுநர் குழுவினர் ரோப்கார் சேவையை ஆய்வு செய்து, அதன் இயக்கத்திற்கான சான்றை வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில், செப்டம்பர் 22-ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் ரோப்கார் சேவை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரோப்கார் சேவை முக்கியமான வசதியாக இருந்து வருகிறது.

குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மலைப்பாதையில் நீண்ட தூரம் நடந்து செல்ல சிரமப்படும் பக்தர்கள் ரோப்கார் சேவையை பயன்படுத்தி எளிதாக மலைக்கோயிலை சென்றடைகின்றனர். அதே நேரத்தில், ரோப்காரில் பயணம் செய்வது பக்தர்களுக்கு மலைக்கோயிலை சென்றடைவதற்கான வசதியாக மட்டுமின்றி, இயற்கை அழகை ரசிக்கும் இனிய அனுபவமாகவும் இருந்து வருகிறது. ரோப்கார் மேல்நோக்கி செல்லும் போது பழனி மலையின் இயற்கை எழில், சுற்றியுள்ள மலைப்பகுதிகள் மற்றும் நகரின் அழகை உயரத்தில் இருந்து பார்த்தபடியே பக்தர்கள் பயணம் செய்து வந்தனர்.

குடும்பத்துடன் வரும் பக்தர்களுக்கும் இந்த பயணம் சிறப்பான அனுபவமாக இருந்து வருகிறது. நீண்ட நாட்களாக பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை தற்போது அனைத்து பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளும் நிறைவடைந்து மீண்டும் தொடங்கப்பட உள்ளதால், பழனி வரும் பக்தர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மீண்டும் ரோப்காரில் பயணம் செய்து இயற்கை அழகை ரசித்தபடியே மலைக்கோயிலை சென்றடைந்து முருகப்பெருமானை தரிசிக்க முடியும். இவ்வாறு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.