திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலாகும். இங்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை தருவார்கள். பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய விஷேச நாட்களின் பக்தர்கள் அலைகடலாய் திரண்டு வருவார்கள். இங்கு பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி மலை தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல படிப்பாதை, யானை பாதை, விஞ்ச், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளது.

கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை, 64 நாட்களுக்குப் பிறகு இன்று சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. வருடாந்திர பராமரிப்பு பணிகளின்போது ரோப் காரில் புதிய கம்பி வடம் பொருத்தப்பட்டது. ஜார்கண்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கம்பி வடமும், மேல் தளத்தில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ஷாப்டுகளும் பொருத்தப்பட்டன.

மேலும் ரோப் கார் பெட்டிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய வண்ணம் பூசப்பட்டது. தொடர்ந்து எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பின்னர் ஐஐடி குழுவினர் ரோப் காரை ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்கினர். இதையடுத்து இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ரோப் கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் இயக்கப்பட்டது. மேலும் ரோப் கார் வளாகத்தில் புதிய டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, பால் சீலிங் மற்றும் வண்ண விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 64 நாட்களுக்குப் பிறகு ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால், நீண்ட நேரம் காத்திருக்காமல் மலைக்கோவிலுக்கு செல்லும் வசதி கிடைத்துள்ளதை எண்ணி பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ரோப் கார் சேவை தொடக்க நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், உபயதாரர்கள் மற்றும் கோவில் இணை ஆணையர் பொறுப்பு வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மலைப்பாதையில் நீண்ட தூரம் நடந்து செல்ல சிரமப்படும் பக்தர்கள் ரோப்கார் சேவையை பயன்படுத்தி எளிதாக மலைக்கோயிலை சென்றடைகின்றனர். அதே நேரத்தில், ரோப்காரில் பயணம் செய்வது பக்தர்களுக்கு மலைக்கோயிலை சென்றடைவதற்கான வசதியாக மட்டுமின்றி, இயற்கை அழகை ரசிக்கும் இனிய அனுபவமாகவும் இருந்து வருகிறது. ரோப்கார் மேல்நோக்கி செல்லும் போது பழனி மலையின் இயற்கை எழில், சுற்றியுள்ள மலைப்பகுதிகள் மற்றும் நகரின் அழகை உயரத்தில் இருந்து பார்த்தபடியே பக்தர்கள் பயணம் செய்து வந்தனர்.

குடும்பத்துடன் வரும் பக்தர்களுக்கும் இந்த பயணம் சிறப்பான அனுபவமாக இருந்து வருகிறது. நீண்ட நாட்களாக பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை தற்போது அனைத்து பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளும் நிறைவடைந்து மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதால், பழனி வரும் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.