உத்தமபாளையம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த மாணவன் மீது ஈட்டி எறியும் பயிற்சியாளர் எறிந்த ஈட்டி தலையில் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன், சுகன்யா தம்பதியர். சந்திரன், கேரளா ஏலத்தோட்டத்தில் கூலித்தொழியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் சாய் பிரகாஷ் வயது (13), இந்த சிறுவன் உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் (சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி) விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். கால் பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் மாணவன் என கூறப்படுகிறது.

எப்பொழுதும் போல் மாலை வேளையில் பள்ளி முடிந்த பின்பு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடுவது வழக்கம். அதன்படி மாணவன் கால் பந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பள்ளியில் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் திபேஸ் (19) என்பவர் சென்னை கல்லூரி ஒன்றில் பட்ட படிப்பு படித்து வருகிறார். மேலும் திபேஸ் ஒரு ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர். திபேஷ் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி மேல் கொள்வதற்கு கூடலூரில் இருந்து இராயப்பன்பட்டியில் உள்ள பள்ளிக்குச் சென்று நாள்தோறும் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்து வந்துள்ளார். மேலும் அங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சியை கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திபேஷ் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஈட்டி எறிதல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திபேஷ் எறிந்த ஈட்டி அங்கு கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த சாய் பிரகாஷின் பின் தலையில் குத்தி பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்த சகமாணவர்கள் சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள் மாணவனை தூக்கிக்கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவனுக்கு மூளை சாவு ஏற்பட்டதாக கூறி தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த ராயப்பன்பட்டி காவல்துறையினர் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளனர். பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.