பரணி தீபம் முதல் மகா தீபம் வரை - திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முழு விவரம்!

1 hour ago 1
ARTICLE AD

திருவண்ணாமலை: உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 2026ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நவம்பர் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் தீபஜோதி எரியவிடப்படும் என்ற தகவல் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம்

பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சியளித்த திருத்தலமாக விளங்கும் இங்கு, கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மகா தீபத் திருவிழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அந்த வகையில், 2026ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முக்கிய நிகழ்வுகள் நவம்பர் 12ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகின்றன. தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் உற்சவம் ஆகியவை நடைபெற்று, நவம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் பத்து நாள் பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

வாகன உற்சவங்கள் - மகா ரதத் தேரோட்டம்

கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினந்தோறும் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

விழாவின் ஐந்தாம் நாளான நவம்பர் 19ஆம் தேதி ரிஷப வாகன உற்சவமும், ஆறாம் நாளான நவம்பர் 20ஆம் தேதி வெள்ளி ரத உற்சவமும் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏழாம் நாளான நவம்பர் 21ஆம் தேதி மகா ரத உற்சவம் நடைபெறுகிறது. இதில் அண்ணாமலையார் பெரிய தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்தத் தேரோட்டத்தைக் காணவும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வார்கள்.

நவம்பர் 24-ல் அதிகாலை பரணி தீபம் - மாலையில் மகா தீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நவம்பர் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் அண்ணாமலையார் திருக்கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். இதனைத் தொடர்ந்து மாலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

மாலை சுமார் 6 மணியளவில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண மலையின் பல்வேறு பகுதிகளிலும், கிரிவலப் பாதையிலும், நகரின் பல்வேறு இடங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் அந்தத் தருணத்தில், கோவிலில் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டு வழிபடுவது விழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும்.

தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் எரியும் மகா தீபம்!

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் கூடுதல் சிறப்பாக, நவம்பர் 24ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் தீபஜோதி தொடர்ந்து எரியவிடப்படும்.

இதனால் மகா தீபத் திருநாளில் மட்டுமின்றி, அதற்குப் பிந்தைய நாட்களிலும் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்கள் மலை உச்சியில் ஜொலிக்கும் மகா தீபத்தைத் தரிசித்து வழிபடும் வாய்ப்பு கிடைக்கும்.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னரே பக்தர்கள் தங்களது வீடுகளிலும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது காலம் காலமாகப் பின்பற்றப்படும் மரபாகும். வீடுகள், கோவில்கள், தெருக்கள் என எங்கும் தீப ஒளி பரவி திருவண்ணாமலை நகரமே ஒளிமயமாகக் காட்சியளிக்கும்.

மகா தீபத்திற்குப் பிறகு தெப்பல் உற்சவங்கள்

மகா தீபத் திருவிழாவைத் தொடர்ந்து நவம்பர் 25ஆம் தேதி முதல் தெப்பல் உற்சவங்கள் நடைபெற உள்ளன. நவம்பர் 26ஆம் தேதி காலை சுவாமி, அம்பாள் கிரிவலமும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறும். நவம்பர் 27ஆம் தேதி மாலை மீண்டும் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நிகழ்வாக நவம்பர் 28ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2026 - முழு அட்டவணை

நவம்பர் 12 வியாழன் துர்க்கை அம்மன் உற்சவம்

நவம்பர் 13 வெள்ளி பிடாரி அம்மன் உற்சவம்

நவம்பர் 14 சனி விநாயகர் உற்சவம்

நவம்பர் 15 ஞாயிறு கொடியேற்றம் - முதல் நாள்

நவம்பர் 16 திங்கள் இரண்டாம் நாள் திருவிழா

நவம்பர் 17 செவ்வாய் மூன்றாம் நாள் திருவிழா

நவம்பர் 18 புதன் நான்காம் நாள் திருவிழா

நவம்பர் 19 வியாழன் ரிஷப வாகன உற்சவம்

நவம்பர் 20 வெள்ளி வெள்ளி ரத உற்சவம்

நவம்பர் 21 சனி மகா ரத உற்சவம்

நவம்பர் 22 ஞாயிறு எட்டாம் நாள் திருவிழா

நவம்பர் 23 திங்கள் ஒன்பதாம் நாள் திருவிழா

நவம்பர் 24 செவ்வாய் பரணி தீபம், மகா தீபம்

நவம்பர் 25 புதன் தெப்பல் உற்சவம்

நவம்பர் 26 வியாழன் சுவாமி, அம்பாள் கிரிவலம், தெப்பல் உற்சவம்

நவம்பர் 27 வெள்ளி தெப்பல் உற்சவம்

நவம்பர் 28 சனி சண்டிகேஸ்வரர் உற்சவம்

இந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ள மகா தீபத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 11 நாட்கள் மலை உச்சியில் ஒளிரும் மகா தீபஜோதியைத் தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Read Entire Article