மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, இந்தியாவின் எரிசக்தி மற்றும் வர்த்தக நிலை குறித்து மத்திய அரசு இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் இருப்பு மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து நிலவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை

நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, சமூக வலைதளங்களில் பரவும் தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

உர உற்பத்தி மற்றும் காஸ் விநியோகம்

உர ஆலைகள்: கடந்த 6 மாத சராசரியில் 70-75% என்ற அளவில் உர ஆலைகளுக்கு சீரான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தடையற்ற உற்பத்திக்காக கூடுதல் LNG மற்றும் RLNG திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய இணைப்புகள்

மார்ச் மாதத்தில் மட்டும் வீடுகள், வணிக வளாகங்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் என சுமார் 2.9 லட்சம் புதிய எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 94,000 மெட்ரிக் டன் எல்பிஜி (LPG) ஏற்றிய இரண்டு சரக்குக் கப்பல்கள், பாதிப்புக்குள்ளான பகுதிகளைக் கடந்து பாதுகாப்பாக இந்தியக் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

Ministry of Petroleum & Natural Gas: "Adequate stocks of petrol and diesel are available at all Petrol Pumps in the country. The public is advised not to believe rumours. Two LPG carriers with about 94,000 MT of cargo safely transit the region, moving towards Indian shores.… pic.twitter.com/3YJj9LzGS4

— ANI (@ANI) March 29, 2026

துறைமுகங்கள் மற்றும் இந்தியர்கள் பாதுகாப்பு

இந்தியாவின் எந்தவொரு துறைமுகத்திலும் நெரிசல் இல்லை என்றும், செயல்பாடுகள் அனைத்தும் வழக்கம் போல் சீராக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் சூழலை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அங்குள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கே எங்களின் முதன்மையான முன்னுரிமை." என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அங்கிருக்கும் இந்திய மாணவர்கள், மாலுமிகள் மற்றும் தொழிலாளர்களுக்குத் தேவையான விசா, தூதரக உதவி மற்றும் இதர வசதிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.