தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழைக்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்து தர தயார் நிலையில் இருக்கிறோம். மழையால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும், இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க தயார் நிலையில் இருக்கிறாம் என்று மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழைக்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் 24 மணி நேரமும் வழங்க மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் தஞ்சாவூரில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் வடிய வைக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

51 வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மழைக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளை வழங்க, 25 பேர் கொண்ட சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 18004251100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தால் அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதே போல், மழைக்காலங்களில் சுகாதார நடவடிக்கையை சிறப்பாக மேற்கொள்ளவும், கொசு உள்ளிட்ட கழிவுநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழையால் மக்கள் பாதிக்கப்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மரங்கள் முறிந்து விழுந்தால் அதை உடனே அகற்ற மரம் வெட்டும் கருவிகளும், ஜேசிபி, கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் உள்ளிட்டவைகளும், பேரிடர் மீட்புக் கருவிகளும் மாநகராட்சியில் தயார் நிலையில் உள்ளது. எனவே மக்கள் மழையால் எந்த பகுதியிலாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆணையர் ஜி.கண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.