இந்தியாவில் கல்வி என்பது அத்தியாவசியமான ஒன்று. கல்வி இருந்தால் ஒரு குடும்பம் மேன்மை அடையும், அந்த குடும்பத்திற்கே பெருமை வந்து சேரும். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தை ஆங்கில கல்வி கற்க வேண்டும் என்பது தீராத கனவாக இருந்து வருகிறது. தங்களுக்கு கிடைக்காத கல்வி என் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்பது அடிப்படையான தேவையாக இருக்கிறது. ஆங்கில மோகம் விலகியபாடில்லை. நான் கஷ்டப்பட்டாலும் என் பிள்ளை நல்லா வளர வேண்டும் என்ற நோக்கத்திற்காக நகரத்திலேயே மிகச்சிறந்த ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.

ஆங்கில கல்வி மோகம்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஆசையாக ஏபிசிடி பேசுவதை கேட்டு மகிழும் தாய்மார்கள் ஏராளம் உள்ளனர். ஆனால், சில கல்வி நிறுவனங்கள் பிசினஸாக மாற்றி வருவது தான் வேதனை அளிக்கிறது. தற்போது கல்வி வியாபாரம் ஆகிவிட்டது என்பது போன்ற வசனங்களை படங்களில் கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் ஒரு கல்வி நிறுவனத்தில் நர்சரிக்கான ஆண்டு கட்டனத்தை கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள். இது கல்லூரி படிப்பா, கல்வி படிப்பா என்ற சந்தேகமும் எழலாம்.

ஏபிசிடி கற்க ரூ.21,000

ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று நர்சரிக்கான ஆண்டு கட்டணம் ரூ.2.51 லட்சம் என இருந்ததை கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது மாதம் ரூ.21,000 கல்வி கட்டணம் வசூலித்து வருகிறது அந்த கல்வி நிறுவனம். கல்வி கட்டணம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் ஏபிசிடி கற்றுக்கொடுக்க ரூ.21,000 என கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். எனது கல்லூரி படிப்புக்கே இவ்வளவு செலவு ஆனது இல்லை. என்னடா பித்தலாட்டமா இருக்கு என சரமாரி கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.