<p>நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். அதைத்தொடர்ந்து இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை பேசி பிரச்னையில் மாட்டிக்கொள்வார். அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சினிமாத்துறையில் பட்டியலினத்தவர்களின் முன்னேற்றம் குறித்து அவதூறாக பேசி தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். </p>
<p>இதுதொடர்பாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் பெற்றனர். இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதன் பின்னர் மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவானார். அவர் டெல்லியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. இந்நிலையில், மீரா மிதுனின் தாயார் மகளை காணவில்லை எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் அவரை கண்டுபிடித்து தர மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில், மீரா மிதுனை வரும் ஆக.11ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>