முகத்தில் ஸ்பிரே அடித்து கொள்ளை

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் ( வயது 34 ) என்பவர், யானைகவுனி வெங்கட்ராயன் தெருவில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 24 - ம் தேதி தங்க நகைப்பட்டறைக்கு 2 நபர்கள் தங்க காசுகள் வாங்குவது போல கடைக்கு வந்து தங்க நாணயத்தில் முத்திரை பதிக்க வேண்டும் என்று கேட்ட போது ஜெகதீஸ் உள்ளே சென்று முத்திரை பதிக்கும் போது இருவர் புகார் தாரர் ஜெகதீஸை தாக்கி அவரது முகத்தில் ஸ்பிரே அடித்து மயக்கமடைய செய்து புகார் தாரர் வைத்திருந்த சுமார் 750 கிராம் தங்க நாணயங்கள் வெள்ளி நாணயங்கள் மற்றும் தாமிர தகடுகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

நவீன தொழில் நுட்ப உதவியுடன் உதவி

இது குறித்து ஜெகதீஷ் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கின் மீது துரித விசாரணை மேற்கொண்டு விரைந்து கைது செய்ய யானைகவுனி காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து நவீன தொழில் நுட்ப வசதி உதவியுடன் விசாரணை மேற்கொண்டு இராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், பகுடி நகர் காவல் நிலைய சரகத்தில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின்படி தனிப்படையினர் இராஜஸ்தான் மாநிலத்திற்கு விமானம் மூலம் 24 ம் தேதி சென்று அப்பகுதியில் உள்ள காவல் நிலைய போலீசார் உதவியுடன் பல்வேறு கிராமங்களில் புலனாளிகள் மூலம் தகவலறிந்து இராஜஸ்தான் மாநிலம் , பாலி மாவட்டம் , கர்மாவாஸ் பட்டா கிராமம் பகுதியை சேர்ந்த வர்தாராம் (எ) வினோத், ( வயது 33 ) கே.கே. ஜுல்லர்ஸ் உரிமையாளர், மற்றும் சர்வான் குர்ஜார், ( வயது 19 ) ஓம்பிரகாஷ் ( வயது 23 ) தேவலி ஹுல்லா ஆகியோரை அதிகாலையில் கைது செய்தனர்.

குற்றவாளிகள் ரயில்கள் மூலம் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

அவர்களிடமிருந்து 414.8 கிராம் தங்க நாணயங்கள், 36 கிராம் வெள்ளி நாணயங்கள் மற்றும் 295 கிராம் தாமிர தகடுகள் மீட்கப்பட்டன. மேற்கண்ட பாலி மாவட்டத்தில் உள்ள சரக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கைகளுடன் இரயில் மூலமாக சென்னை அழைத்து வர உள்ளனர். மேற்கண்ட நபர்களை விசாரித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.