தெரு நாய்கள் கடியில் இருந்து குழந்தைகளை, முதியவர்களை, பொதுமக்களை காப்பாற்ற தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி! - தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெயரில் மதுரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.

தெருநாய்களுக்கு ரேபிஸ்

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தெருநாய்களின் தொல்லை அதிகளவு உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தாங்கள் விரும்பும் செல்லப் பிராணிகளை வளர்க்கும் நபர்கள், அதனை தொடர்ந்து கவனிக்க முடியாமல் தெருக்களிலும், காட்டுப் பகுதிகளிலும் விட்டுச் செல்கின்றனர். இப்படியாக தெருநாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதாக கால்நடை பராமரிப்புத்துறையினர் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில் நாய் இனப்பெருக்கம் செய்து தற்போது தெருக்களை ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது. இதைக் கடந்து வீட்டிற்கு செல்வது மிகப்பெரும் சவாலாக அமைகிறது. இதில் எந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு பொதுமக்கள் அஞ்சி பதற்றத்துடன் வீடு சென்று நிம்மதி அடைகின்றனர். இப்படியான சூழ்நிலையை தான் நாள்தோறும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் தெரு நாய்கள் கடியில் இருந்து குழந்தைகளை, முதியவர்களை, பொதுமக்களை காப்பாற்ற தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து, மதுரையில் போஸ்டர் ஒட்டப்படுகிறது.

தெருநாய்களை காப்பகங்களுக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தெருவில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மேலும் குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் என நாளுக்கு நாள் நாய் கடிக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் நாய்கள் தொல்லை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், அனைத்து தெருநாய்களையும் காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டது. இந்நிலையில் மதுரை மாநகர் முழுவதிலும் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெயரில் அச்சிடப்பட்ட போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

நன்றி தெரிவித்து போஸ்டர்

அந்த போஸ்டரில் “தெரு நாய்கள் கடியில் இருந்து குழந்தைகளை, முதியவர்களை, பொதுமக்களை காப்பாற்ற தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி! எனவும், DOG SHELTER (BHAIRAVA SHALA) அமைத்து தெரு நாய்களுக்கு உணவு, கருத்தடை, தடுப்பு ஊசிகள் அளித்து காப்பாற்ற உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி! Rabies இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு நன்றி... நீதிபதிகளுக்கும் இதை நிறைவேற்ற போகும் அரசுகளுக்கும் கோடி நன்றிகள் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதோடு. இவண் : தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் - மதுரை என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.