தீபாவளி சீட்டு மோசடி ; 2 கோடி ரூபாய் ஏமாற்றம் !! பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவி ( வயது 38 ) என்பவர் அதே பகுதியில் தீபாவளி சீட்டு பிடித்துள்ளார். 1300 நபர்களிடம் இவர் சீட்டு பிடித்ததாக கூறப்படுகிறது. தலா ஒரு நபருக்கு மாதம் 1300 வீதம் 12 மாதம் என ஒருவருக்கு மொத்தம் 15,600 ரூபாய் வசூல் செய்துள்ளார். பயனாளிகளுக்கு ஒரு கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், பட்டாசு , ஸ்வீட் பாக்ஸ், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை தருவதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1300 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் தீபாவளி நேரத்தில் 500 - க்கும் நபர்களுக்கு மட்டுமே இவர் பொருட்களை கொடுத்துள்ளார். மீதமுள்ள 800 - க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். மேலும் வியாசர்பாடி திடீர் நகர் பகுதியை சேர்ந்த கனி ராஜா ( வயது 40 ) மற்றும் காளீஸ்வரி அடங்கிய குழுவினர் இது குறித்து சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

சீட்டு பிடித்த தேவி என்பவரின் மருமகன் லோகேஷ் ( வயது 27 ) மற்றும் அவரது நண்பர் முரளி ( வயது 30 ) ஆகிய இருவரும் எம்.கே.பி பகுதிக்கு வந்து சீட்டு போட்டவர்களுக்கு தலா 5000 ரூபாய் தருவதாகவும் மீதி பணத்தை பிறகு தருவதாகவும் கூறி கையில் பணத்துடன் வந்துள்ளனர். அப்பொழுது அங்கு ஒன்று கூடிய மக்கள் லோகேஷ் மற்றும் முரளி ஆகிய இருவரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பணத்துடன் ஆட்டோவில் அவர்களை அழைத்துச் சென்று சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் இருவரையும் வியாசர்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். வியாசர்பாடி குற்றப் பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் ( வயது 41 ) அவரது மனைவி தேவி ( வயது 37 )
இருவரும் வியாசர்பாடி பகுதியில் சீட்டு போட்டு சுமார் 2 கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஏற்கனவே பிடிபட்ட தேவியின் மருமகள் மணலி சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ( வயது 27 ) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முரளி ( வயது 30 ) மற்றும் தேவி அவரது கணவர் முனியப்பன் என நான்கு பேரையும் கைது செய்த வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.