Tiruvannamalai New Bus Stand: திருவண்ணாமலை மாநகராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் இன்றைய தினம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் - Tiruvannamalai New Bus Stand

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு, திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 27.01.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திருவண்ணாமலை மாநகராட்சியில் இந்த புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். சுமார் 6.83 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இன்றைய தினம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதியதாக கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்தில் 74 கடைகள், 2 உணவகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி ஓய்வு இடங்கள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்ன ?. Tiruvannamalai New Bus Stand Key Features

ஒரே நேரத்தில் 54 பேருந்துகளை நிறுத்தும் வகையில் நடைமேடைகள் (Platforms) உள்ளன. இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு, மொத்தம் 100 பேருந்துகள் வரை நிறுத்த முடியும்.

சுமார் 200 பேருந்துகளை நிறுத்தும் அளவுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க விசாலமான மற்றும் நவீன இருக்கைகளுடன் கூடிய காத்திருப்புப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைகள் மற்றும் உணவகங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கெனத் தனி பாலூட்டும் அறை வசதி செய்யப்பட்டுள்ளது

நவீன கழிப்பறைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த தகவல்களைத் தரும் மின்னணுத் திரைகள் மற்றும் ஒலிபெருக்கி வசதிகள் உள்ளன.

பயணிகள் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தப் போதுமான இடவசதி (Parking) உள்ளது.

இப்ப பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:

இப்பேருந்து நிலையத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, மணலூர்பேட்டை ஆகிய மார்க்கங்களில் பேருந்துக்கள் இயக்கப்படும். மேலும் புறநகர பேருந்துகள் அனைத்தும் திருவண்ணாமலை மாநகராட்சியில் புதியதாக துவக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.

மேலும் சேத்துப்பட்டு, மேல்மலையனூர், வந்தவாசி போளூர், வேலூர், ஆற்காடு, ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், செங்கம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூர், தருமபுரி, ஓசூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், மேல்சோழங்குப்பம் ஆகிய மார்க்கங்களில் இயக்கப்படும் புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் அனைத்தும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம்போல் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ?

புதிய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் அருகே செயல்பாட்டிற்கு வந்திருப்பதால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களால், திருவண்ணாமலை நகரம் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வரும் நிலையில், இந்த பேருந்து நிலையம், போக்குவரத்து நெரிசலையில் இருந்து தீர்வு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.