தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள 8000 மஹல்லா ஜமாத்துகளிலே இருந்து ஒரு லட்சம் இளைஞர்களை திரட்டப் போகிறோம். திராவிட மாடல் ஆட்சிக்கு ஏன் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் வீதி வீதியாகச் சென்று சொல்லக்கூடிய ஒரு கூட்டத்தை நாங்கள் தயார்படுத்தி இருக்கிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொகிதீன் கூறினார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் நடந்த இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் பேசியதாவது:

இந்த சமுதாயம் திராவிட மாடல் ஆட்சிக்கு எப்படியெல்லாம் உறுதுணையாக வந்து கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்துவதற்காக தான் இந்த மாநாட்டை நாங்கள் கூட்டியிருக்கிறோம். காயிதே மில்லத்துக்கு நூற்றாண்டு நூலகம் அவர் பிறந்த இடத்திலே நீங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள். நாங்கள் கேட்கவில்லை, காயிதே மில்லத் பெயர் சிறப்பாக விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள்.

அது மாதிரி சென்னையிலே விமான நிலையத்திற்கு அருகிலேயே ரூ.60 கோடிக்கு மேல் செலவு செய்து புனித ஹஜ் பயணிகள் செல்லக்கூடிய ஹஜ் இல்லத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள். பல நேரங்களிலே உங்களிடத்திலே கேட்டதுண்டு, இது இயலுமா என்று நினைத்துக் கொண்டு தயங்கித் தயங்கிக் கேட்டதும் உண்டு. முஸ்லிம் சமுதாயம் தயங்கிக் கேட்டாலும் சரி, அது மனதிலே வைத்துக் கொண்டு வெளியே சொல்லாமல் கேட்டாலும் சரி அத்தனையும் முஸ்லிம் சமுதாயம் கேட்பதையும், கேட்க நினைப்பதையும் இன்னும் ஒரு படி மேலே சொன்னால் கேட்க நினைப்பதை விட கேட்பதற்கு கற்பனை செய்வதையும் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு முதரைத் தான் நாம் பெற்றிருக்கிறோம்.

இங்கு நபிகள் நாயகத்தோட 38-வது வாரிசாக வந்து பேசிய சாதிக் அலி சியாப் பேசும்போது ஸ்டாலினைப் போல ஒரு முதல்வர் எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலே உள்ள இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் வேண்டும் என்று சொன்னார். வெளி மாநிலங்களுக்கு செல்கிற நேரத்திலே பல பேர் வேடிக்கையாகக் கூடச் சொல்வார்கள்,

உங்களுக்கு மாதிரி ஒரு முதல்வர் எங்களுக்கு இன்னும் வாய்க்கவில்லையே என்று. ஏன் பா.ஜனதா ஆளக்கூடிய இடத்தில் கூடச் சொல்கிறார்கள். தமிழக முதல்லர் வழிகாட்டுதலில் நீங்கள் செல்லுகிற பாதை எங்களைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் வெல்லுகிற பாதைதான். எங்களது பாதை, நீங்கள் செல்லுகிற பாதை, வெல்லுகிற பாதை. முதல்லர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட .மாடல் ஆட்சி மீண்டும் மீண்டும் அல்ல, தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சியின் மேன்மையை தமிழ்நாடு முழுவதும் உள்ள 8000 மஹல்லா ஜமாத்துகளிலே இருந்து ஒரு லட்சம் இளைஞர்களை திரட்டப் போகிறோம். அந்த ஒரு லட்சம் பேரும் நீங்கள் செய்த நல்ல காரியங்களை மக்களுக்கு சொல்வதோடு, சமுதாய மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு ஏன் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் வீதி வீதியாகச் சென்று சொல்லக்கூடிய ஒரு கூட்டத்தை நாங்கள் தயார் படுத்தி இருக்கிறோம். அவர்கள் திராவிட மாடல் ஆட்சிக்குப் பேருதவியாக இருக்கப்போகிறார்கள்.

இந்த அற்புதமான ஆட்சியைத் தொடர்ந்து நீடித்து நிலைக்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் மட்டுமல்ல, நாங்கள் இணைந்திருக்கக்கூடிய அனைத்து அமைப்புகளும் மட்டுமல்ல, மஹல்லா ஜமாத்துகளிலே உள்ள அனைவரும் உங்கள் நல்லாட்சி நிலைத்திருக்க எத்தனை தியாகங்களைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.