சீர்காழி: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் உயிருக்கு அவரது மகன் துரை வைகோவால் ஆபத்து இருப்பதாக, முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளரும், தற்போதைய அதிமுக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான மார்கோனி சீர்காழியில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி பயத்தால் சின்னம் மாற்றம்?

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மார்கோனி, சீர்காழி தொகுதியில் மதிமுகவிற்கு முதலில் 'தீப்பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். "இந்திய வரலாற்றிலேயே ஒரு கட்சி தனக்கான சின்னத்தை அறிவித்துவிட்டு, தேர்தலுக்கு முன்பே தோல்வி பயத்தின் காரணமாக அந்தச் சின்னத்தை கைவிட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது இதுவே முதல்முறை.

திருச்சியில் 'செத்தாலும் தனிச் சின்னத்தில்தான் நிற்பேன்' என்று கண்ணீர் மல்க நாடகமாடிய துரை வைகோ, இப்போது சீர்காழியில் தோல்வி பயத்தின் காரணமாக கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டார்," என்று கடுமையாக விமர்சித்தார்.

வைகோவின் உயிருக்கு அச்சுறுத்தல்?

மேலும் வைகோவின் பாதுகாப்பு குறித்து மார்கோனி அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார், தாக்குதல் குற்றச்சாட்டு: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வைகோவை அவரது அறையிலேயே வைத்து துரை வைகோ தாக்கியதாகவும், அதில் வைகோவின் கை முறிந்து அவர் கழிவறையில் விழுந்ததாகவும் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

நிர்வாகிகள் ராஜினாமா: தென் சென்னை மாவட்டச் செயலாளர் கழகக் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததற்குக் காரணம், துரை வைகோ தனது தந்தை வைகோவை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டி அடிக்கப் பாய்ந்ததைப் பார்த்ததுதான் என்று குறிப்பிட்டார்.

மத்திய புலனாய்வுத் துறைக்கு கோரிக்கை

"வைகோவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இது குறித்து மத்திய புலனாய்வுத் துறையும் (CBI), தமிழக டிஜிபியும் உடனடி நடவடிக்கை எடுத்து அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்," என அவர் வலியுறுத்தினார்.

மதிமுக தொண்டர்களின் குமுறல்

மதிமுகவில் 30 ஆண்டுகள் பயணித்தவன் என்ற முறையில் தனக்குத் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டச் செயலாளர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாகக் கூறிய மார்கோனி, துரை வைகோவை ஒரு 'கார்ப்பரேட் ரவுடி' என்று சாடினார்.

"கட்சியில் உழைத்த தொண்டர்களை துரை வைகோ மிக மோசமாக நடத்துகிறார். அடிக்கப் பாய்கிறார். வாரிசு அரசியலை எதிர்த்துத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கம், இன்று வாரிசிடமே அடமானம் வைக்கப்பட்டுள்ளது. வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் குடும்பத்தையே நடுத்தெருவில் விட்டவர்கள் இவர்கள்," என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

"தைரியம் இருந்தால் தீப்பெட்டி சின்னத்தில் வா!" - நேரடி சவால்

சீர்காழி தொகுதியில் மதிமுகவிற்கு இப்போது நிர்வாகிகளே இல்லை என்று குறிப்பிட்ட அவர், துரை வைகோவிற்கு ஒரு பகிரங்க சவாலை விடுத்தார்.

"துரை வைகோ அவர்களே, உங்களுக்குத் தைரியம் இருந்தால், அறிவித்தபடி தீப்பெட்டி சின்னத்திலேயே இங்கு வந்து நில்லுங்கள். உங்களை நான் ஜெயித்துக் காட்டுகிறேன். உதயசூரியன் சின்னத்தின் பின்னால் ஒளிந்துகொள்வது உங்கள் பலவீனத்தையே காட்டுகிறது." என சவால் விட்டார்.

இந்த அதிரடிப் பேட்டியால் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக நிர்வாகியின் இந்த நேரடித் தாக்குதலுக்கு மதிமுக தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.