தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாகி வருகிறது என திமுக எம்.பி., கனிமொழி தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி., கனிமொழி, “தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜாவை வாசுதேவநல்லூரில் போட்டியிட வேண்டும் என சொன்னார். அங்கு பாஜக வெற்றி வாய்ப்பை பெறலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை முறியடிக்க வேண்டும் என சொன்னார். எதிரில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாதுகாப்புத்துறை அமைச்சரையும் பரப்புரைக்கு அழைத்து வந்தார். அதனையும் மீறி திமுக வேட்பாளரான ராஜா வெற்றி பெற்றிருக்கிறார்.

<iframe title="CM Vijay Trichy Full Speech | "கல்யாண வீட்டுலையும் புலம்பல்" ஸ்டாலின் மீது அட்டாக் விஜய் FULL SPEECH" src="https://www.youtube.com/embed/iKdVTTlcY-o" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

மக்களுக்கு பணியாற்றுபவர்களுக்கு, அவர்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடியது திமுகவின் திராவிட மாடல் ஆட்சியாகும். ஆனால் இன்று இருப்பவர்கள் எப்படிப்பட்ட ஆட்சியை நடத்துவார்கள் என்பது உங்களுக்கு தெரியும். தவெக ஆட்சிக்கு வந்து 23 நாட்களாகி விட்ட நிலையில் 64 கொலை சம்பவங்கள் நடந்து விட்டது. 111 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், அதில் 61 குழந்தைகளுக்கு எதிரானது.

இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் நடக்கும் நேரத்தில் ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள தவெக அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு சென்ற திமுக ஆட்சியில் நடந்த செயலால் தான் இப்படி நடக்கிறது என சொல்கிறார்கள். திமுக ஆட்சிக்காலத்தில் அப்படி ஒரு சூழலே தமிழ்நாட்டில் இல்லை. பலபேர் திமுக பற்றி தவறான செய்திகளைப் பரப்பிய நிலையில் கூட அப்படி ஒரு சூழல் தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு மாநிலங்களில் ஒன்றாக திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருந்தது. இன்று பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாகி வருகிறது.

Also Read: Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!

தவெக சட்டம் ஒழுங்கை சரி செய்து, பெண்கள் பாதுகாப்பு குறித்த முடிவை எடுக்க வேண்டும். அதை விடுத்து யார் மீது பழிபோடலாம் என்ற காரணத்தை தேடிக் கொண்டிருந்தால் தமிழ்நாட்டு மக்கள் பொறுமை காக்க மாட்டார்கள். தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றி வாக்குறுதி கொடுத்து ஓட்டை பெறலாம் என தேர்தல் அறிக்கையில் எந்த அறிவிப்பும் இருக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் சொன்னார்.

எனினும், இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் தவெக விவசாய பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரிசர்வ் வங்கி விதிமுறைகளை காரணம் காட்டுகிறது. இப்படி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள். எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டு என திமுகவுக்கு தெரியும். உங்களுக்கு திமுக கால அவகாசம் தரும். ஆனால் தவறு இருந்தால் போராடவும், சுட்டிக்காட்டவும் இக்கட்சி தயங்காது" என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.