தாம்பரம் மாநகர காவல்துறையின் அதிரடி சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் ஹுக்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

60 காவலர்கள் இணைந்து சோதனை

இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தாம்பரம் மாநகர காவல்துறை 26.07.2025 அன்று. போதைப்பொருட்கள் பரவலை தடுக்கும் நோக்கில், பொத்தேரி, மறைமலைநகர் மற்றும் கட்டாங்குலத்தூர் பகுதிகளில் ஒரு விரிவான சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஒரு உதவி காவல் ஆணையாளர், 5 காவல் ஆய்வாளர்கள், 20 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 60 காவலர்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் மூலம் நடத்தப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள்

மொத்தமாக 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. அவற்றில் 5 அடுக்குமாடி குடியிருப்புகள், 2 தனி வீடுகள்.1 பான் கடை, 2 பெட்டி கடைகள், 1 காபி ஷாப் மற்றும் 1 சாலையோரக் கடையும் அடங்கும். இந்த சோதனையில் 166 கிராம் கஞ்சா, 5,250 கஞ்சா சாக்லெட்டுகள், அங்கிகரிக்கப்படாத ஹூக்கா மையங்களில் இருந்து ஹுக்கா தொடர்பான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பணை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 10 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டது.

கைது மற்றும் சட்ட நடவடிக்கை:

இச்சோதனையில் 7 கல்லூரி மாணவர்கள் உட்பட, 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர், கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் 2-ஆம் ஆண்டு B. Tech, CSC மற்றும் 4-ஆம் ஆண்டு B. Tech, CSC படித்து வருகின்றனர். இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு சட்டம், 1985 NDPS Act & சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தடுப்பு சட்டம், 2003 COTPA Act ஆகிய சட்டங்களின் கீழ், 11 நபர்கள்மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில், தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை மொத்தம் 318 NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,516 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 341 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும், 1,208 கிலோ போதைப் பொருட்கள் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அழிக்கப்பட்டுள்ளன. தொடர் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 11 நபர்களை கண்டறிந்து, அவர்கள்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெறும் விசாரணை:

போதைப்பொருட்கள் வாங்கும் மூலாதாரங்கள் (Source), விநியோக வலைத்தளங்கள் மற்றும் வியாபார குழுக்களின் மீது புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வலையமைப்பை முற்றிலும் கலைத்து, போதைப்பொருள் பயன்பாட்டை அரவே ஒழிக்க மாபெரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் மாநகர காவல்துறையினர், தங்களது அதிகார வரம்பிற்குள் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதில் முனைப்புடன் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக தாம்பரம் மாநகர காவல்துறையின், தீவிர முயற்சியை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.