அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு சென்றவர்களுக்கு மரியாதை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்த கருத்துக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி சொன்னது என்ன?

கோவையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுக ஆட்சியில் இருக்கும்போது விஜய் திரைப்படம் ஒன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விஜய் என்னை வீட்டில் வந்து சந்தித்தார். நான் என்னுடைய காரில் அவரை அழைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். அந்த படம் வெளியாக உதவி செய்தேன். விஜய் என் நண்பராக இருந்தாலும் அவர் செய்யும் தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க மாட்டேன். கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களை நேரில் கூட போய் விஜய் பார்க்கவில்லை. ஒரு தலைவன் என்றால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்க வேண்டும்.

மேலும் அதிமுகவில் இருந்து விஜயின் தவெக கட்சிக்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப தயாராக உள்ளனர். அங்கு இங்கிருந்து சென்றவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. ஏற்கனவே இருந்த மரியாதை, பதவியை கொடுத்தால் அதிமுகவுக்கு வர அவர்கள் தயாராக உள்ளனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம். ஆனால் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்றளவும் எம்ஜிஆர் தான் உதாரணமாக இருந்து வருகிறார் என தெரிவித்தார்.

பதிலடி கொடுத்த செங்கோட்டையன்

நான் அதிமுகவுக்கு மட்டுமல்ல எந்த கட்சியாக இருந்தாலும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்கட்டும். எத்தனைப் பேர் எங்களை நாடி வருகிறீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளப் போகிறீர்கள். தவெகவுக்கு சென்ற அதிமுகவினருக்கு மரியாதை இல்லை என அவர் சொல்லலாம். எனக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் என்ன மரியாதை கொடுத்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். மற்றவர்கள் உதாரணம் காட்ட தேவையில்லை என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து சசிகலா புதிய கட்சி தொடங்கியது பற்றி கருத்து தெரிவித்த செங்கோட்டையன், “சசிகலா தெளிவாக ஒன்றை தெரிவித்து விட்டார். புறமுதுகு குத்தியவர்களை மட்டும் பார்க்கவில்லை. நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள். என் கணவர் இறந்தபோது 15 நாட்கள் சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி கொடுத்தாலும், 5 நாட்கள் தான் அனுமதியளிக்க வேண்டும் என இங்கு யார் சொன்னார் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். ஆகவே துரோகத்தின் மொத்த உருவமாக இருப்பவரைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, நல்லதே நடக்கும் என ஒற்றை வார்த்தையில் செங்கோட்டையன் பதிலளித்தார்.