தஞ்சாவூர்: காத்திருக்குது அபாயம்... அதிகாரிகள் கண்ணில் படவே இல்லையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். என்ன விஷயம் என்று தெரியுங்களா?

கும்பகோணம் நகர பஸ் நிலையத்தில் அபாய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் தகரப் பலகைகள் குறித்து பொதுமக்களும் பயணிகளும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதெல்லாம் அதிகாரிகள் கண்ணில் படவே படாதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கும்பகோணம் புதிய பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ளது நகர பஸ் நிலையம். தினமும் இங்கு 50க்கும் மேற்பட்ட நகரப் பஸ்களும், 25க்கும் மேற்பட்ட மினி பஸ்களும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் தினசரி இந்த நிலையம் வழியாகவே பயணம் செய்கின்றனர். இதனால் இங்கு ஒரு நாளில் சராசரியாக ஆயிரக்கணக்கானோர் காலை முதல் நள்ளிரவு வரை வருகை தருகின்றனர்.

அத்தகைய இடத்தில், பஸ் காத்திருப்பு மண்டபம் முன்புறம் நிறுவப்பட்டிருந்த தகரப் பலகைகள் தற்போது பழுதடைந்து, சில இடங்களில் கழன்று தொங்கியவாறு உள்ளன. காற்று பலமாக வீசும் நேரங்களில் பலகைகள் ஆடிக்கொண்டே இருப்பது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. “இந்த பலகைகள் எந்த நேரத்திலும் கீழே விழும் ஆபத்து உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி இங்கு வருகிறார்கள். விபத்து ஏற்பட்டால் பெரிய உயிர்சேதம் நேரலாம்” என பயணிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும், சிலர் கூறுகையில், “பலமுறை இதை குறித்து மாநகராட்சிக்கும் போக்குவரத்து துறைக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்தச் செயல்பாடும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, உடனடியாக பழுது பார்த்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அபாய நிலையில் உள்ள தகரப் பலகைகளை உடனடியாக அகற்றவும், புதிய பலகைகள் பொருத்தப்படவும் வேண்டும் இன்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.