சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை கற்பிக்கும் சாதிய அமைப்புக்கு எதிராக பல தலைவர்கள் தீவிரமாக இயங்கிய நிலையிலும், தற்போது வரை அதன் தாக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

தலித்துடன் கல்யாணம்:

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஆணைப் பழங்குடியினப் பெண் திருமணம் செய்து கொண்ட பிறகு, பெண்ணின் குடும்பத்தை கிராம மக்கள் ஒதுக்கி வைத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மீண்டும் அவர்களது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கான சடங்குகளை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சடங்குகளை பின்பற்ற மறுத்தால், அவரது குடும்பம் காலம் முழுவதும் ஒதுக்கி வைக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்டது.

ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்:

ஊடகங்களில் வெளியான இந்தச் செய்தி உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை இச்சம்பவம் எழுப்பும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

➡️NHRC, India takes suo motu cognisance of the reported social boycott of a Scheduled Tribe woman’s family by the villagers after her marriage with a man from the Scheduled Caste in Rayagada district, Odisha

➡️Reportedly, the villagers imposed a purification ritual including…

— PIB India (@PIB_India) June 25, 2025

2025 ஜூன் 21-ம் தேதி ஊடகங்களில் வெளியான செயதிகளின்படி, அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் கிராம மக்களின் கட்டளைக்கு அடிபணிந்ததாகவும், அந்த கிராமப்பகுதிகளில் பின்பற்றப்படும் சடங்கு முறைகளின் ஒரு பகுதியாக, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 40 பேருக்கும் மொட்டையடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.