தருமபுரி அருகே அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வரவேற்பு கொடுத்த பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை என்பது படிப்படியாக சரிந்து வந்தது. சுற்றுவட்டார பகுதியில் இருந்த குழந்தைகளை தனியார் பள்ளியில் பெற்றோர்கள் சேர்த்து வந்தனர். இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் மாணவர்களுக்கு அரசு பள்ளியின் மீது ஆர்வத்தை தூண்டுவதற்காக பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகுமார் பள்ளி வளாகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் கண்களை கவரும் வகையில் பள்ளி வகுப்பறை மற்றும் சுற்று சுவர்களில் வன விலங்கு வகைகள், மற்றும் வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சி வகைகள், பறவைகள், இயற்கை சார்ந்த ஓவியங்கள், தேசியக்கொடி மற்றும் தேசிய தலைவர்கள், சோட்டா பீம், டோரா புஜ்ஜி போன்ற கார்ட்டூன் வகைகள் குழந்தைகளை கவரும் வண்ணங்களை கொண்டு பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது‌. இதில் முதல் வகுப்பில் 20 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் நாள் பள்ளி திறக்கப்பட்டது. இதில் முதல் வகுப்பில் சேர்ந்த 20 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

தொடர்ந்து பள்ளிக்கு முதல் நாள் வருகை தந்த மாணவர்களுக்கு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகுமார், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி, வகுப்பறையில் அமர வைத்தனர். இந்தாண்டு இதுவரை முதல் வகுப்பில் 20 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்தாண்டை விட, இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.