கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என மத்திய அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:

கிராமப்புற வறுமைக்கு தீர்வு காணவும், கிராமப்புற மக்களின் பொருளாதார நலனை மேம்படுத்தவும், வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும், கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், சமூகப் பாதுகாப்பு வழங்கவும், கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பலவகையான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது என மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. சி வி சண்முகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம், பிரதமரின் கிராமசாலைத் திட்டம், தீன்தயாள் உபாத்யாயா ஊரக மேம்பாட்டுத் திட்டம், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம் போன்றவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

இத்தனை திட்டங்களா?

அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.86,000 கோடியும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்திற்கு ரூ.54,832 கோடியும், பிரதமரின் கிராமசாலைத் திட்டத்திற்கு ரூ.19,000 கோடியும் தீன்தயாள் உபாத்யாயா ஊரக மேம்பாட்டுத் திட்டம், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம் உள்ளிட்ட தீன்தயாள் அந்த்யோதயா- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு ரூ.19,005 கோடியும், தேசிய சமூக உதவித் திட்டத்திற்கு ரூ.9,652 கோடியும் 2025-26 நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீடாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட சமூகப் பொருளாதார கணக்கெடுப்பில் கிராமப்புறங்களில் வீட்டுவசதி, நிலம் வைத்திருத்தல், நிலம் இல்லாதிருத்தல், கல்வித்தகுதி, பெண்களின், மாற்றுத்திறனாளிகளின் நிலை, தொழில், சொத்துடைமை, போன்றவை குறித்த தரவுகள் திரட்டப்பட்டன.

தமிழ்நாட்டில் இத்தனை பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனரா?

அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1 கோடியே 88 ஆயிரத்து 119 ஊரகப்பகுதி வீடுகளில் 47,04,939 வீடுகள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளன. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 1,15,249 ஊரகப்பகுதி வீடுகளின் 40,336 வீடுகள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளன என்ற தகவல்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

2024 ஜனவரியில் நித்தி ஆயோக் வெளியிட்ட இந்தியாவில் பலவகை வறுமை நிலை என்பது குறித்த விவாத அறிக்கையின் படி 2013-14-ல் 79.17 சதவீதமாக இருந்த பலவகை வறுமை, 2022-23-ல் 11.28 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தக் காலகட்டத்தில் 24.82 கோடிபேர் பலவகை வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளதாகவும் திரு கமலேஷ் பாஸ்வான் தெரிவித்தார்.

காலமுறையிலான தொழிலாளர் குறித்த வருடாந்தர ஆய்வறிக்கை 2023-24-ன்படி தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிலாளர் விகிதம் 50.7 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியின் ஊரகப்பகுதியில் உள்ள தொழிலாளர் விகிதம் 47.1 சதவீதமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.